இந்தியா

மாணவர்களின் ஆராய்ச்சிப் பணிகள்: தொழில் துறையினர் பங்களிக்க பிரணாப் வலியுறுத்தல்

DIN

மாணவர்கள் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு தொழில் துறையினர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி, ஹைதராபாதில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி, மாணவர்களிடையே பேசியதாவது:
புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகம் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை எண்ணி மகிழ்கிறேன். பொதுவாக பல்கலைக்கழகங்கள் என்பது கருத்து பரிமாற்றத்துக்கான இடமாகவும், பரஸ்பரம் தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான அறிவுக் கூடமாகவும் திகழ வேண்டும் என்று ஜவாஹர்லால் நேரு தெரிவித்துள்ளார். அந்தக் கூற்றை நான் முழுமையாக ஏற்கிறேன். சொல்லப்போனால் கருத்துப் பரிமாற்றங்கள்தான் பல்கலைக்கழகங்களுடைய முதன்மையான நோக்கமாக இருக்கின்றன.
இந்தியக் கல்வி நிறுவனங்கள் பல்வேறு சாதனைகளை செய்து வருவது பெருமைக்குரியது. இருந்தபோதிலும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைப் பொருத்தவரை நாம் பின்தங்கியே உள்ளோம் என்பது கசப்பான உண்மை.
ஒரு முறை ஐஐடி (கரக்பூர்) இயக்குநரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அவர் தெரிவித்த ஒரு தகவல் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. 100 சதவீத பணிவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டாலும், மாணவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகள் திருப்திகரமாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பின்னடைவுக்கு முழுக்க, முழுக்க கல்வி நிறுவனங்களே பொறுப்பு எனக் குற்றம்சாட்ட முடியாது. ஏனென்றால் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தடங்கல் இல்லாத நிதி ஒதுக்கீடுகள் அவசியம். அதற்காக அரசு நிதி ஒதுக்க வேண்டும், அல்லது தொழில் துறையினர் நிதியுதவி செய்ய வேண்டும்.
அரசின் நிதி, ஆராய்ச்சிப் பணிகளுக்கு போதுமானதாக இருக்காது. எனவே, இந்த விவகாரத்தில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தொழில் துறையினர் முன்வர வேண்டும். அவர்களது ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிப் பணிகளுமே இந்தியாவுக்கு சர்வதேச அளவில் முக்கியத்துவத்தையும், சிறப்பிடத்தையும் பெற்றுத் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றார் பிரணாப் முகர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT