இந்தியா

ஏழைகளுக்கும் விமானச் சேவை: புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் உரை

DIN

ஏழை எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிறு நகரங்களுக்கு விமானச் சேவையை நீட்டிப்பதற்கும், ஏழை எளியோர் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்வதற்கும் வழிவகுக்கும் 'உடான்' என்ற புதிய திட்டத்தின் கீழான முதல் விமானச் சேவையை, ஹிமாசலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் உள்ள ஜுப்பர்ஹட்டி விமான நிலையத்தில், பிரதமர் மோடி வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின்கீழ் சிம்லாவிலிருந்து தில்லிக்கு ரூ. 2,500 கட்டணத்தில், விமானத்தில் செல்லலாம்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ரப்பர் செருப்பு அணியும் சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்பதே எனது அரசின் லட்சியம். அதற்கேற்ப உடான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் விமானப் பயணம் என்றால், ராஜா-மகாராஜாக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் மட்டுமே உரியது என்ற நினைப்பு இருந்தது. அரசு விமானச் சேவை நிறுவனமான ஏர்-இந்தியாவின் சின்னம்கூட மகாராஜாதான்.
முன்பு, வாஜ்பாய் அரசில் ராஜீவ் பிரதாப் ரூடி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அவரிடம் இந்தப் பிரச்னையை நான் எழுப்பினேன். பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் வரைந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ள பொதுஜனம் என்ற கதாபாத்திரம் அல்லவா ஏர்-இந்தியா நிறுவனத்தின் சின்னமாக இருக்க வேண்டும்?
சிறு நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்துத் தொடர்பை நீட்டிப்பதன் மூலமே, இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலம் நாட்டின் விதியும் சித்திரமும் மாற்றியமைக்கப்படும்.
கடந்த 70 ஆண்டுகளாக சரியான விமானப் போக்குவரத்துக் கொள்கை இல்லாமையால், கடந்த இரண்டாம் உலகப் போரின்போது அமைக்கப்பட்ட எண்ணற்ற சிறு விமான நிலையங்கள், பின்னர் பயன்படுத்தப்படாமலேயே கிடக்கின்றன. எமது அரசு உருவாக்கியுள்ள விமானப் போக்குவரத்துக் கொள்கையின் கீழ் இதுபோன்ற விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும், அவற்றில் 30 விமான நிலையங்களில் விரைவில் வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.
பிராந்திய அளவிலான விமானப் போக்குவரத்துத் தொடர்பு, 2-வது நிலை, 3-வது நிலையில் உள்ள சிறு நகரங்களில் வளர்ச்சியை வழிநடத்தும் பொறியாகச் செயல்படும்.
தற்போது உடான் திட்டத்தின் கீழ் வாடகைக் காருக்கான செலவைவிட குறைந்த கட்டணத்தில் விமானத்தில் செல்லலாம். மேலும் நேரமும் வெகுவாகக் குறையும். தில்லி-சிம்லா இடையே வாடகைக் காரில் பயணிக்க கிலோமீட்டருக்கு ரூ. 10 செலவாகும், பயண நேரமும் 9 மணி நேரம் பிடிக்கும். ஆனால் உடான் திட்டத்தின்கீழ் ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம், கட்டணமும் கிலோமீட்டருக்கு ரூ. 7-க்குள்தான் இருக்கும்.
இந்தத் திட்டம் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் உதவுகிறது. பல்வேறு கலாசாரங்களும் பாரம்பரியங்களும் சங்கமிக்க வழிவகுக்கிறது. எல்லோரும் பறக்கலாம், ஒன்றுபட்டு இருக்கலாம் (சப் உடே, சப் ஜுடே) என்பதே இதன் முழக்கம் என்றார் பிரதமர் மோடி.
இந்நிகழ்ச்சியின்போது கடப்பா-ஹைதராபாத்,நாந்தேட்(மகாராஷ்டிரம்) -ஹைதராபாத் இடையேயான மேலும் 2 உடான் சேவைகளை, காணொலி முறையில் பிரதமர் தொடக்கிவைத்தார். மேலும், பிலாஸ்பூரில் புனல் (ஹைட்ரோ) பொறியியல் கல்லூரி கட்டுவதற்கு, ஆன்லைன் மூலம் அடிக்கல் நாட்டினார். உடான் திட்டம், ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் மும்பை-நாந்தேட் இடையே அடுத்த விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT