இந்தியா

மக்களுக்கு இழைக்கும் துரோகம் கடவுளை ஏமாற்றுவதற்கு சமமாகும்: ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கு முதல்வர் கேஜரிவால் அறிவுரை

DIN

மக்களுக்கு இழைக்கும் துரோகம் கடவுளை ஏமாற்றுவதற்கு சமமாகும் என்று மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவுரை வழங்கினார்.
தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 48 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதையொட்டி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை அக்கட்சியின் புதிய கவுன்சிலர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர். அப்போது கவுன்சிலர்கள் அனைவரும், 'கடவுளை சாட்சியாகக் கொண்டு, கட்சிக்கும், ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கும் துரோகம் இழைக்கமாட்டேன் என உறுதியேற்கிறேன்' என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் அவர்களிடையே முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நீங்கள் மனதை விரிவுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வார்டையும் குடும்பத்தை நடத்தும் தந்தை போல பராமரிக்க வேண்டும். குறைகளைக் கேட்டு தீர்வு காண முயல வேண்டும். நமது கட்சித் தொண்டர்களின் மனது புண்படும்படி நடந்த கொள்ளக் கூடாது. கட்சிக்கான ஆதரவாளர்களையும், தன்னார்வலர்களையும் அதிக அளவில் பெருக்க வேண்டும். தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மாநகராட்சியில் கட்சித் தாவல் தடை சட்டம் இல்லை என்பதால் உங்களைப் பிரிக்க பாஜக கடும் முயற்சி மேற்கொள்ளும். உங்களுடன் பேசும் அனைவரது உரையாடல்களையும் செல்லிடப்பேசியில் பதிவு செய்யுங்கள். உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கும் துரோகம், கடவுளை ஏமாற்றுவதற்கு சமமாகும் என்றார் கேஜரிவால்.
இதற்கிடையே, தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து தில்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அதன் நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், புதிய கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.எச். பூல்கா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், 'தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறியும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டன' என்றார்.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: மாநகராட்சித் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட கூட்டத்தில் கட்சியின் எம்எல்ஏக்களும், புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் தாக்கமும், அங்கு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி தில்லி மாநகராட்சித் தேர்தலில் எவ்வாறு எதிரொலித்துள்ளது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது' என தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT