இந்தியா

லஷ்கர் பயங்கரவாத இயக்க கமாண்டர் சுட்டுக்கொலை: காஷ்மீரில் வன்முறை

DIN

காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் அபு துஜானா (26), அவருக்கு உதவி வந்த பயங்கரவாதி ஆரிஃப் லில்ஹாரி ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அபு துஜானா, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் முக்கியக் குற்றவாளியாவார். அவரது தலைக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ஹக்ரிபோரா பகுதிக்கு அபு துஜானா அடிக்கடி வந்து செல்வதாக போலீஸாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. அபு துஜானாவின் மனைவி அப்பகுதியில் தங்கியிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரைப் பிடிப்பதற்கு பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டனர். இந்நிலையில், அபு துஜானாவும் அவரது உள்ளூர் உதவியாளர் ஆரிஃப்பும் திங்கள்கிழமை இரவு ஹக்ரிபோரா பகுதிக்கு வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அபு துஜானாவும், ஆரிஃப்பும் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் அந்த வீட்டைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் சரணடையுமாறு இருவருக்கும் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், அவர்கள் வெளியே வரவில்லை.
இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரர்கள் கதவை உடைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் சென்றனர். அப்போது, பயங்கரவாதிகள் இருவரும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்த அபு துஜானா தனது 17 வயதில் இருந்து லஷ்கர் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தார். 2010-ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் முதல்முறையாக ஊடுருவிய அவர், லஷ்கர் அமைப்பின் கட்டமைப்பை வலுப்படுத்தினார். காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டுவதில் முக்கியப் பங்காற்றிய அவர், இந்திய ராணுவத்தின் மீது பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியுள்ளார்.
காஷ்மீரின் பாம்போரில் கடந்த ஆண்டு 8 சிஆர்பிஎஃப் வீரர்களை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அபு துஜானா மூளையாக செயல்பட்டார். இதையடுத்து, இந்தியாவில் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
வன்முறையில் ஒருவர் பலி: அபு துஜானா கொல்லப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து, புல்வாமா மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடி பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் வன்முறை கும்பலை பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர். இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். காயமடைந்த பலர் மருத்துவமனைகலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து காஷ்மீர் முழுவதும் செல்லிடப்பேசிக்கான இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புல்வாமா மாவட்டத்தில் மட்டுமின்றி காஷ்மீர் பள்ளதாக்கு முழுவதுமே வன்முறை பரவி வருகிறது. பதற்றான இடங்களில் பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதி அபு துஜானாவைச் சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரின் ரிஜிஜு, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT