இந்தியா

சரத் யாதவ் பதவி பறிப்பு: நிதீஷ் அதிரடி

DIN

மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தள (ஜேடி(யு) எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவியிலிருந்து மூத்த தலைவர் சரத் யாதவை அக்கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் சனிக்கிழமை அதிரடியாக நீக்கியுள்ளார்.
பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்ததை எதிர்த்ததால், இந்த நடவடிக்கையை நிதீஷ் குமார் எடுத்துள்ளார்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து நிதீஷ் குமார் ஆட்சியமைத்திருந்த நிலையில், அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பிகார் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வியை பதவி விலகும்படி நிதீஷ் குமார் வலியுறுத்தினார். அதை தேஜஸ்வி பொருட்படுத்தாத காரணத்தினால், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் சேர்ந்து நிதீஷ் குமார் ஆட்சியமைத்தார்.
நிதீஷ் குமாரின் இந்நடவடிக்கையை ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் குழுத் தலைவருமான சரத் யாதவ் விரும்பவில்லை. பாஜகவுடன் நிதீஷ் குமார் கூட்டணியமைத்ததை துரதிருஷ்டவசமான முடிவு என்று அவர் விமர்சித்தார்.
இதனிடையே, பிகாரில் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்த பிறகு, தில்லிக்கு நிதீஷ் குமார் முதல்முறையாக வெள்ளிக்கிழமை வந்தார். அங்கு அவர், பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சரத் யாதவ் தனது அரசியல் பாதை குறித்து சுதந்திரமாக முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தில்லியில் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை ஜேடி(யு) எம்.பி.க்கள் சந்தித்து, சரத் யாதவை மாநிலங்களவை ஜேடி(யு) தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பதவியில் ஆர்.சி.பி. சிங்கை நியமிப்பது தொடர்பான கடிதத்தை சனிக்கிழமை அளித்தனர்.
அதேபோல், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பிகார் மாநிலத் தலைவர் வசிஷ்ட நாராயண் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில், "மாநிலங்களவை எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவியிலிருந்து, சரத் யாதவ் நீக்கப்பட்டு, ஆர்.சி.பி. சிங் நியமிக்கப்பட்டுள்ளார்; சரத் யாதவின் அண்மைக்கால செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கையை எடுக்க வேண்டியதாகிவிட்டது. ஏனெனில், கட்சி விரோத செயல்பாடுகளில் யாரேனும் ஈடுபடும்பட்சத்தில், தலைவர் என்ற முறையில், அதை ஒருமனதாக கண்டிக்க வேண்டியதும், இந்நடவடிக்கையை எடுக்க வேண்டியதும் எனது பொறுப்பாகும்' என்றார்.
மாநிலங்களவையில் ஜேடி(யு)}க்கு 10 எம்.பி.க்களும், மக்களவையில் 2 எம்.பி.க்களும் உள்ளனர். இதில் மாநிலங்களவை எம்.பி.யான அலி அன்வர் அன்சாரி, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டதால், ஜேடி(யு)வில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT