இந்தியா

உத்கல் ரயில் விபத்து: 4 ரயில்வே அதிகாரிகள் இடைநீக்கம்

DIN

உத்கல் ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே உயரதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே செயலர் நிலை அதிகாரி உள்பட 3 உயரதிகாரிகள் விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸார் வழக்குப்பதிவு: இந்த விபத்து தொடர்பாக அடையாளம் காணப்படாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இயந்திரங்களைக் கையாளுவதில் கவனக் குறைவாக இருப்பது, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது, கவனக்குறைவால் மரணத்துக்குக் காரணமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, உத்கல் ரயில் விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விபத்தில் 23 பேர் உயிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஒடிஸா மாநிலம், புரியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாருக்குச் சென்று கொண்டிருந்த உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரப் பிரதேசத்தின், முசாஃபர்நகர் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை திடீரென தடம் புரண்டது. இதில் 14 பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. சில ரயில் பெட்டிகள், அருகில் இருந்த வீடுகள் மீதும் விழுந்தன. இதில் அந்த வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துவிட்டனர். 156 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு செலுத்துவதற்காக 100 பாட்டில் ரத்தத்தை செஞ்சிலுவை சங்கம் அனுப்பி வைத்துள்ளது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை: இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் பணியில் கவனக்குறைவாக இருந்ததுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வடக்கு ரயில்வே பொது மேலாளர், ரயில்வே வாரியத்தின் (பொறியியல் பிரிவு) உறுப்பினர், தில்லி பிராந்திய ரயில்வே மேலாளர் ஆகிய இருவரும் விடுப்பில் செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பிராந்திய முதுநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர், ரயில் தண்டவாள பராமரிப்புப் பிரிவின் முதுநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகிய நால்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ரயில்வேயின் தண்டவாளப் பிரிவு தலைமைப் பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நடைபெற்ற இடத்தில் பராமரிப்புப் பணி நடைபெற்றுள்ளது. இதனால் தண்டவாளம் முமுமையாக இணைக்கப்படாமல் இருந்தது என்ற இடைக்கால விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்கல் ரயில் விபத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்த சில மணி நேரத்தில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இழப்பீடு: முன்னதாக இது குறித்து சுரேஷ் பிரபு கூறுகையில், "காயமடைந்தவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதி அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, லேசாகக் காயமடைந்தவர்களுக்கு தலா
ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும்.
முதற்கட்டத் தகவல்களின் அடிப்படையில், இந்த விபத்துக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை உடனடியாக முடிவு செய்யும்படி ரயில்வே வாரியத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.
விபத்துக்குள்ளானபோது உத்கல் விரைவு ரயிலில் 23 பெட்டிகள் இருந்தாகவும், அவற்றில் 13 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் ரயில்வே தில்லி மண்டல மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்தார். அந்த 13 பெட்டிகளில் 6 பெட்டிகள் மோசமாக சேதமடைந்திருப்பதாக அவர் கூறினார்.
மோப்ப நாய்கள் உதவியுடன்... ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் 4 மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில் பெட்டி இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருந்த இருவரை மோப்ப நாய் மூலம், மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்து காரணமாக வடக்கு ரயில்வேயின் மீரட் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை வேறு பாதைக்கு திருப்பப்பட்டன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
முன்னதாக, இந்த விபத்து குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் முகமது ஜாம்ஷெட், தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
உத்கல் விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கு, விபத்துப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தது காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. விபத்து ஏற்பட்டவுடன் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று நாங்கள் பார்வையிட்டபோது, அங்கு பராமரிப்புக் கருவிகள் இருந்ததைக் கண்டோம்.
அந்தப் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதாகவும், இருந்தும் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த விபத்து குறித்து வடக்குப் பகுதி ரயில்வே பாதுகாப்புப் பிரிவு ஆணையர் தலைமையில் திங்கள்கிழமை முதல் தீவிர விசாரணை நடைபெறும். முழுமையான விசாரணைக்குப் பிறகே விபத்து தொடர்பான முழு விவரமும் தெரிய வரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT