இந்தியா

ஸ்ரீஜன் முறைகேடு விவகாரம்: பிகார் சட்டப் பேரவையில் ஆர்ஜேடி அமளி

DIN

ஸ்ரீஜன் முறைகேடு விவகாரத்தை முன்வைத்து, பிகார் முதல்வர் பதவியிலிருந்து நிதீஷ் குமார் ராஜிநாமா செய்யக்கோரி, சட்டப் பேரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி (ஆர்ஜேடி) எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
பிகார் சட்டப் பேரவையில் இந்த முறைகேடு விவகாரத்தை ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை எழுப்பினர். முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலு பிரசாதின் மகனுமான தேஜஸ்வி யாதவ் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள், பிகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, ஸ்ரீஜன் முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியைப் பாதுகாத்ததற்காகவும், முறைகேட்டை கண்டும் காணாமல் இருந்ததற்காகவும் முதல்வர் நிதீஷ் குமாரும், துணை முதல்வர் சுஷில்குமார் மோடியும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பகல்பூர் மாவட்டத்தில் மட்டும் இந்த முறைகேடு நடைபெறவில்லை என்றும், பிகாரின் பிற மாவட்டங்களிலும் இந்த முறைகேடு நடந்துள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால், பிகார் சட்டப் பேரவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து, பிகார் சட்டப் பேரவையை அதன் தலைவர் விஜய் குமார் சௌதரி ஒத்திவைத்தார்.
முக்கிய குற்றவாளி சாவு: இதனிடையே, ஸ்ரீஜன் முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான மகேஷ் மண்டல் (57) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது மரணம் நிகழ்ந்த சூழ்நிலைகள் குறித்து தேஜஸ்வி யாதவ் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பிகார் சட்டப் பேரவைக்கு வெளியே தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஊழலை மறைப்பதற்காகவே, பிகார் அரசில் அங்கம் வகிக்கும் நபர்களால் மகேஷ் மண்டல் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த ஊழலானது, மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரிய ஊழல் ஆகும்' என்றார்.
பிகார் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், லாலு பிரசாதின் மனைவியுமான ராப்ரி தேவி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஊழல் குறித்து உண்மையான விசாரணை நடைபெற வேண்டுமெனில், முதல்வர் நிதீஷ் குமாரும், துணை முதல்வர் சுஷில்குமார் மோடியும் பதவி விலக வேண்டும்; இந்த ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.
பின்னணி: பிகார் மாநிலம், பகல்பூர் மாவட்டத்தில் பெண்கள் நலனுக்காக செயல்படும் ஸ்ரீஜன் எனும் தன்னார்வ தொண்டு அமைப்புக்கு மாநில அரசு நிதி முறைகேடாக ரூ.950 கோடி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, அந்த முறைகேடு குறித்து சிபிஐ அமைப்பின் விசாரணைக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பரிந்துரை செய்துள்ளார். இந்தத் தகவலை சமூக ஊடகத்தில் முதல்முறையாக பகிரங்கமாக நிதீஷ் குமார்தான் கடந்த 8-ஆம் தேதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT