இந்தியா

ஜேடியு யாருக்கு சொந்தம்?: தேர்தல் ஆணையத்திடம் முறையிடசரத் யாதவ் அணி முடிவு

DIN


இதனிடையே, நிதீஷ் குமாருக்குப் போட்டியாக கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
ஜேடியு கட்சிக்குள் நிலவி வரும் இத்தகைய உச்சகட்ட மோதலால் பிகார் அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த ஜேடியு தலைவர் நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தார். கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த முடிவை எடுத்த அவர், பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்தார்.
நிதீஷின் இந்த நடவடிக்கைகளுக்கு ஜேடியு மூத்த தலைவர் சரத் யாதவ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து, சரத் யாதவிடம் இருந்த ஜேடியு மாநிலங்களவைத் தலைவர் பதவியையும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் நிதீஷ் பறித்தார். இந்த சூழலில் நிதீஷுக்கு எதிராக அணி திரட்டும் நடவடிக்கைகளில் சரத் யாதவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சித் தலைவர்களையும் தனது பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க வைத்தார்.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்பட 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்கள் மாநாட்டையும் பாட்னாவில் சரத் யாதவ் சனிக்கிழமை நடத்தினார்.
அதே நாளில் நிதீஷ் குமார் தலைமையில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, அதற்கு போட்டியாக தங்களது தரப்பிலும் தேசியக் கவுன்சில் கூட்டம் நடத்தப்படும் என்று சரத் யாதவ் அணியினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது ஆதரவாளரும், கட்சியின் மூத்த தலைவருமான அருண் ஸ்ரீவஸ்தவ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஜேடியு கட்சியின் ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவும் சரத் யாதவுக்குத்தான் உள்ளது. அதேபோன்று பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவும் அவருக்குத்தான் உண்டு. அந்த அடிப்படையில், தேசிய கவுன்சில் கூட்டத்தை விரைவில் கூட்ட உள்ளோம். அதுமட்டுமன்றி கட்சிக்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
ஏற்கெனவே கட்சியின் சின்னத்துக்கு (வில்) உரிமை கோரி சரத் யாதவ் அணியினர் விரைவில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப் போவதாகத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT