இந்தியா

கர்நாடகம் புதிய அணை கட்டுவதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

DIN

மேக்கே தாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்டுவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை தெரிவித்தது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதன் தொடர் விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமையும் நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி முன்வைத்த வாதம்:
காவிரி பாயும் கர்நாடகத்தின் எல்லைக்குள்பட்ட பகுதியான் மேக்கே தாட்டுவில் அணை கட்டுவதை தமிழக அரசு ஏற்காது. கர்நாடக அரசு அணை கட்டினால் அது காவிரி விவகாரத்தை மேலும் சிக்கலாக்கிவிடும். எனவே, புதிய அணை கட்டுவதை தமிழகம் ஏற்காது. 3.47 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கூடுதலாக பயிர் செய்ய கர்நாடகத்துக்கு நடுவர் மன்றம் அனுமதி அளித்தது தவறாகும் என்று வாதிட்டார்.
அப்போது, நீதிபதிகள், 'கர்நாடகம் அணை கட்டுவதை தமிழகம் எதிர்ப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, 'கர்நாடகம் கூடுதல் அணை கட்டினால் புதிய சிக்கலை ஏற்படுத்தும்.
மேலும், ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் இருப்பில் உள்ள நீரின் அளவை அந்த மாநில அரசு தெரிவிப்பது இல்லை' என்றார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் வியாழக்கிழமைக்கு (ஆகஸ்ட் 24) ஒத்திவைத்தனர்.
அமைச்சர் சி.வி. சண்முகம் பேட்டி: இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் முன்வைத்த வாதத்தை தமிழக அரசின் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'கர்நாடகம் கூடுதலாக அணை கட்டுவதை தமிழக அரசு ஏற்காது என்பதை தெளிவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் முன்வைத்த கருத்துகள் ஊடகங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஒரே நிலைப்பாடு என்பது கர்நாடக அரசு கூடுதல் அணை கட்டுவதை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்பதுதான் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT