இந்தியா

தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே: ஆதார் வழக்கில் பரபரப்புத் தீர்ப்பு

DIN


புது தில்லி: தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது.

ஆதார் விவரங்களால் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், தனிநபர் சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது என்று 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில், 9 நீதிபதிகளுமே ஒருமித்த கருத்தைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைககளை முன்னெடுத்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கப்போகிறது என்பதை அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக பல்வேறு மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.

மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது முறையல்ல என்றும் அது தனிநபர் ரகசிய காப்புக்கு எதிரானது என்றும் அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், தனிநபர் ரகசியம் காப்பதை மக்களின் அடிப்படை உரிமையாக்குவது குறித்து விசாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து அந்த விவகாரம் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ் கேஹர் தலைமையிலான அந்த அமர்வில் நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, ஆர்.கே. அகர்வால், ரோஹின்டன் ஃபாலி நாரிமன், அபய் மனோகர் சாப்ரே, டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கௌல், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, தனிநபர் ரகசியங்களை காப்பது என்பது அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை என அறுதியிட்டுக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.

சில நேரங்களில் மக்களின் தனிப்பட்ட தகவல்களை பகிரங்கமாக வெளியிடாமல் தவிர்க்கலாமே தவிர, அத்தகைய விவரங்களை எதற்காகவும் திரட்டவே கூடாது என்று வாதிடுவது ஏற்புடையதல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஒருவேளை தனிநபர் ரகசியம் காப்பதை அடிப்படை உரிமையாக்கி உத்தரவிட்டால், ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பதைக் கூட வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத சூழல் உருவாகிவிடும் எனவும் விசாரணையின்போது கருத்து வெளியிடப்பட்டன.

இதனிடையே, விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மனுக்களின் மீதான தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு இன்று வெளியிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT