இந்தியா

பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் பலி; 100 பேருக்கு மேல் காயம்: எல்லை தாண்டுகிறது பஞ்சாப் சாமியாரால் உண்டான கலவரம்!

DIN

சண்டிகார்: பாலியல் பலாத்கார வழக்கில் சர்ச்சைக்குரிய 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப், ஹரியாணாவில்  உருவான கலவரம் எல்லை தாண்டி பிற மாநிலங்களுக்கும் பரவத் தொடங்குகிறது.

ஹரியாணா மாநிலத்தில், பஞ்ச்குலா  நகரத்தில் 'தேரா சச்சா சவுதா' என்ற பஞ்சாபி அடிப்படைவாத அமைப்பு செயல்பட்டுவருகிறது. இதன் தலைவரான கும்ரீத் ரஹீம் சிங் மீது 2002-ஆம் ஆண்டு, பக்தர்கள் மீதான பாலியல் தொந்தரவின் காரணமாக, வழக்குப் பதிவு செய்ய பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது.  அதனைத் தொடர்ந்து குர்மீத் ராம் ரஹீம் சிங் தன்னுடைய பக்தர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், ஹரியாணாவில் உள்ள பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) சாமியார் குர்மீத் ரஹிம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த அமைப்பின் தொண்டர்கள் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் வன்முறைச் செயல்களில் இறங்கினார்கள். இந்த தகவலை ஊடகங்கள் தான் பெரிதாக்குவதாக அவர்கள் எண்ணுவதால், செய்தி சேகரிக்கச் சென்ற மூன்று செய்தி நிறுவன வாகனங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

வழியில் உள்ள பெட்ரோல் பங்குகள் மற்றும் பேருந்து நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பலர் மீது சாமியார் ரஹீம் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 12-பேர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கலவரக்காரர்களை ஒடுக்க போலீசார் லத்தியால் அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளையம் பயன்படுத்தியும் வருகின்றனர். மேலும் துணை ராணுவப்படையினரும், விரைவுப்படை போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சாமியார் ரஹீமுக்கு அதிக அளவில் ஆதரவாளர்கள் இருப்பதால், வன்முறை தொடர்ந்து பெரிதாகும் அபாயம் உள்ளது.

தற்பொழுது கலவர மையமான பஞ்ச்குலாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த கலவரமானது அருகில் உள்ள, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் தில்லி ஆகிய பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதற்கு எல்லை பகுதிகளில் அதிக அளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலவர நிலை குறித்து கேட்டறிந்தார். அத்துடன் உள்துறை உயர் அதிகாரிங்களுடன் அவர் விரைவில் அவசர ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT