இந்தியா

வட இந்தியா பற்றி எரியக் காரணமாக இருக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங் யார்? 

DIN


பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அவருக்கான தண்டனை விவரம் வரும் 28ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதில் 32 பேர் உயிரிழந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புது தில்லியிலும் வன்முறை வெடித்ததால் பல இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களே பற்றி எரியக் காரணமான இந்த ராம் ரஹீம் யார் என்று அனைவரும் புருவத்தை உயர்த்துகின்றனர்.

அதற்கான பதில்: அவரது டிவிட்டர் பக்கத்தில் அவரைப் பற்றிய தகவலாக, ஆன்மிகக் குரு, கொடைவள்ளல், பன்முகத் திறமைகொண்ட பாடகர், சகலகலா வள்ளவன், விளையாட்டு வீரர், திரைப்பட இயக்குநர், நடிகர், கலைஞர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் என்று பதிவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள குருசார் மோடியா கிராமத்தில் ஜாட் சீக்கியக் குடும்பத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தவர் ராம் ரஹீம்.

ஷா சத்னம் சிங் மகராஜ் என்பவர், இவரை தேரா சீக்கிய மதக் குழுவில் இணைத்து வழி நடத்தினார். இதனால் 23 வயதிலேயே இவர் தலைமை மத குருவாக பிரகடனம் செய்யப்பட்டார்.

இவர், இரு பெண் பக்தர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக, கடந்த 2002-ஆம் ஆண்டில் பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதிக்கு பெயரிடப்படாத ஒரு கடிதம் வந்தது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குர்மீத்துக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 17-ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அப்போது நீதிமன்றத்தில் குர்மீத் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். அதன்படி, பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குர்மீத் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

இதையடுத்து, தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜகதீப் சிங், குர்மீத்தை குற்றவாளியாக அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம், வரும் 28-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, குர்மீத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த போலீஸார், அவரை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் சென்று ரோத்தக் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், அவருக்கு 7 ஆண்டுகளுக்கு குறையாமலோ அல்லது ஆயுள் சிறைத் தண்டனையோ விதிக்கப்பட வாய்ப்புள்ளது. காணொலி முறையில் (விடியோ கான்ஃபரன்ஸ்) இத்தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT