இந்தியா

ஜிஎஸ்டி குறித்த அச்சங்கள் தவறு என நிரூபணமாகிவிட்டது

DIN

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்த அச்சங்கள் தவறு என்று நிரூபணமாகிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
'துடிப்பான நிர்வாகம், குறித்த காலத்தில் பணி முடித்தல்' என்ற கருத்தை மையமாக வைத்து மாநில அரசு உயரதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி மாதம்தோறும் கலந்துரையாடி வருகிறார். அப்போது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், உள்கட்டமைப்புப் பணிகளின் நிலை குறித்து மோடி அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
21-ஆவது மாதமாக புதன்கிழமை இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மோடி பேசியது குறித்து பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மேலும் பல தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்ய மாநில தலைமைச் செயலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. கடந்த இரண்டு மாதத்தில் ஜிஎஸ்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அது தொடர்பான பல்வேறு அச்சங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. அவை அனைத்தும் தவறு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் நவீன தொழில்நுட்பத்தை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும். பணிகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் அமைய முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற 20 கலந்துரையாடல்களில் ரூ.8.79 லட்சம் கோடி மதிப்பிலான 183 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இப்போது நடைபெற்ற கலந்துரையாடலின்போது ரூ.56,000 கோடி மதிப்பிலான ரயில்வே, சாலை அமைப்பு, மின்சாரம், எண்ணெய் குழாய்கள் அமைப்பது, சுகாதாரத் துறை உள்ளிட்ட 9 உள்கட்டமைப்புப் பணிகள் குறித்து மோடி ஆய்வு செய்தார். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தரகண்ட், பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், பிகார், ஒடிசா, தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாநில அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மோடியிடம் விளக்கமளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT