இந்தியா

ராஜீவ் பிரதாப் ரூடி ராஜிநாமா: மோடி அமைச்சரவை விரைவில் மாற்றம்

DIN

மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ராஜீவ் பிரதாப் ரூடி வியாழக்கிழமை இரவு தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
பிரதமர் மோடி, தனதுஅமைச்சரவையை இன்னும் இரு நாள்களில் மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் பிரதாப் ரூடியைத் தொடர்ந்து அமைச்சர்கள் உமா பாரதி, நிர்மலா சீதாராமன், கல்ராஜ் மிஸ்ரா, கிரிராஜ் சிங், சஞ்சீவ் பல்யான் உள்ளிட்டோரும் ராஜிநாமா செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை சீனா செல்லவுள்ளார். அதற்கு முன்னதாகவே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது. அதில் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, கே.கே.வேணுகோபால், மைத்ரேயன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த சூழலில், மத்திய அமைச்சர்கள் சிலரை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் பிரதமர் மோடியுடனும் அவர் கலந்துரையாடினார்.
இதன் தொடர்ச்சியாக, ராஜீவ் பிரதாப் ரூடி தனது பதவியை ராஜிநாமா செய்ததாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பாதுகாப்புத் துறை, நிதித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு தனி அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் அப்பொறுப்புகளை மூத்த தலைவர்களுக்கு வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வயதானவர்களுக்கும், உடல் நலக் குறைவுடன் இருப்போருக்கும் ஓய்வளிக்க பாஜக தலைமை திட்டமிட்டதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே அமித் ஷா சில அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியதாக தில்லி தகவல்கள் கூறுகின்றன.
உ.பி. க்கு புதிய தலைவர் நியமனம்: இதனிடையே, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராமணரான அவருக்கு இப்பொறுப்பை வழங்குவதன் மூலம் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அந்த சமூகத்தினரின் வாக்குகளைப் பெறலாம் என பாஜக தலைமை கருதுகிறது.
அந்த மாநில முன்னாள் அமைச்சராக இருந்த பாண்டே, கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சந்தெளலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு இடமளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் பாண்டேவும் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வார் எனத் தெரிகிறது.
குஜராத் தேர்தல் வியூகம்: முன்னதாக, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் அமித் ஷா தில்லியில் வியாழக்கிழமை கலந்தாலோசித்தார். அக்கூட்டத்தில் அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ஜிதேந்திர சிங், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களைத் தவிர, கட்சியின் பொதுச் செயலாளர் ராம் லாலும் அதில் கலந்து கொண்டார்.
குஜராத் மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஜேட்லியை நியமிக்க அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT