இந்தியா

நாகாலாந்து புதிய முதல்வராக சுரோஜெலி லிஜிட்சு பதவியேற்பு

DIN

நாகாலாந்தின் புதிய முதல்வராக சுரோஜெலி லிஜிட்சு புதன்கிழமை பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
கோஹிமாவிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சுரோஜெலிக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் பி.பி.ஆச்சார்யா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அமைச்சர்களைப் பொருத்தவரை, 2 புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
81 வயதாகும் சுரோஜெலி, தற்போது எம்எல்ஏவாக இல்லை. இதனால், அவர் 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாக வேண்டும்.
நாகாலாந்தில், நாகா மக்கள் முன்னணி தலைமையிலான நாகாலாந்து ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக இருந்த டி.ஆர்.ஜிலியாங், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். நாகாலாந்து உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அவரது அரசின் முடிவுக்கு எதிராக பல்வேறு பழங்குடியின அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், அவர் பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து, நாகாலாந்து ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம், கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. 59 எம்எல்ஏக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், சுரோஜெலி லிஜிட்சு முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நாகாலாந்து பேரவையில் மொத்தமுள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 60 ஆகும்.
8 முறை தேர்வானவர்: நாகா மக்கள் முன்னணியின் தலைவரான சுரோஜெலி லிஜிட்சு, ஏற்கெனவே 8 முறை எம்எல்ஏவாக தேர்வானவர். ஆனால், கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற நாகாலாந்து பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆளும் நாகாலாந்து ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் லிஜிட்சு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT