புதுதில்லி: ரோஸ் வாலி நிதிநிறுவன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்பிக்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வந்த ‘ரோஸ் வாலி' நிதி நிறுவனத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தபஸ்பால் எம்.பி. சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அத்தோடு இந்த முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் மற்றொரு எம்.பி.யும், கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவருமான சுதீப் பந்தோபாத்யாய்க்கும் சி.பி.ஐ. சமீபத்தில் சம்மன் அனுப்பி இருந்தது. இதற்காக செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜரான அவர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பதால், பா.ஜனதா அரசு அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார் .
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் கட்சி தொண்டர்கள் மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் செவ்வாய் முதலே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள பா.ஜனதா அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பப்பட்டன. இவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை மறித்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.