இந்தியா

ராட்டையில் நூல் நூற்கும் மோடி: சாலமன் பாப்பையாவால் தீர்ப்பு சொல்ல முடியாத பட்டிமன்றம்

DIN


புது தில்லி: தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள டைரி மற்றும் காலண்டர்களில் வழக்கமாக இடம் பெறும் காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மும்பையில் தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் டைரி மற்றும் சுவர் காலண்டர்கள் வழங்கப்படுவது வழக்கம். அவற்றில் எல்லாம் இதுவரை காந்தி ராட்டையில் நாள் நூற்கும் படம்தான் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை  பிரதமர் மோடி ராட்டையில் நூல் நூற்கும் படம் இடம் பெற்றிருந்தது.

பைஜாமா குர்தா அணிந்து புதிய ராட்டையில் மோடி நூல் நூற்பது மாதிரியான படம் இடம் பெற்றிருந்தது.

இதனை பாஜக தரப்பு நியாயப்படுத்தினாலும், தில்லி முதல்வர், மேற்கு வங்க முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதாவது, காதி டைரி மற்றும் காலண்டர்களில் காந்தியின் புகைப்படம் ஏற்கனவே பல முறை இடம்பெறாமல் இருந்துள்ளது. 1996, 2002, 2005, 2011, 2013, 2016 ஆகிய ஆண்டுகளிலும் காந்தியின் புகைப்படம் இடம்பெறவில்லை. அது மட்டும் அல்லாமல், காதி டைரி மற்றும் காலண்டர்களில் காந்தியின் புகைப்படம்தான் இடம்பெற வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.

மேலும், காந்தியின் புகைப்படத்தை நீக்கிவிட்டு மோடியின் படம் இடம்பெற்றுள்ளது என்று கூறுவதே தவறு, காதிக்கு பலம் சேர்த்துள்ளனர் என்றே கூற வேண்டும் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.

இளைஞர்களுக்கு முன்னோடியாக மோடி திகழ்கிறார். மேலும், இளைஞர்கள் மத்தியில் காதி உற்பத்திப் பொருட்களை கொண்டு சென்றவர் மோடிதான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2-7 சதவீதம் அளவுக்குள்ளேயே இந்த காதி விற்பனை, கடந்த 2 ஆண்டுகளில் 34 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

ஆனால், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது 1920ம் ஆண்டு காதி இயக்கத்தை மகாத்மா காந்தி கொண்டு வந்ததன் நினைவாகவே, அவரது படம் காலண்டர்களில் இடம்பெற்று வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காதி ஊழியர்கள் சிலர் வாயில் கருப்புத் துணி கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, காந்தியாவதற்கு, பல ஆண்டுகள் கடுமையான வாழ்க்கை முறையை பின்பற்றியிருக்க வேண்டும். வெறும் ராட்டையைச் சுற்றுவது போல போஸ் கொடுத்தால் காந்தியாகிவிட முடியாது. இது வெறும் ஏளனத்தையே உருவாக்கும் என்று பதிவு செய்துள்ளார்.

'காந்தி, தேசத் தந்தை, மோடி யார்???' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மங்கள்யானை விண்ணில் செலுத்தியது காங்கிரஸ் ஆட்சி காலத்தில். ஆனால், அதன் பெருமையை மோடி எடுத்துக் கொள்வது போல, இதெல்லாம் 'மங்கள்யான் எஃபெக்ட்' என்று, கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்.

காதியின் மிக முக்கிய தூதராக மோடி இருக்கிறார். இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் காதி பொருட்கள் பிரபலமாக மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று காதியின் நிர்வாகி வினய் குமார் சக்ஸேனாகூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT