இந்தியா

இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்: மோடியை வரவேற்று நெதன்யாகு பெருமிதம்

DIN

மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தார். இந்தியப் பிரதமரின் வருகைக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பென் குரியன் விமான நிலையத்தில் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை உற்சாகமாக வரவேற்றார். 'எனது நண்பரே வருக!' என்று நெதன்யாகு, ஹிந்தியில் கூறி வரவேற்பளித்தார். அவர் மேலும் கூறுகையில், ' மோடி ஒரு சிறந்த இந்தியத் தலைவர் மற்றும் ஒரு சிறந்த உலகத் தலைவர். இந்தியப் பிரதமர் ஒருவர் எங்கள் நாட்டுக்கு வருகை புரிய வேண்டும் என்று நாங்கள் கடந்த 70 ஆண்டுகளாகக் காத்திருந்தோம்' என்று தெரிவித்தார்.
இரு தலைவர்களும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். விமான நிலையத்தில் சுருக்கமாகப் பேசிக் கொண்ட அவர்கள், அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதம் போன்ற பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ளவும் உறுதிபூண்டனர்.
'நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்' என்று குறிப்பிட்ட நெதன்யாகு, மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தார். இஸ்ரேலுக்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர், போப் ஆண்டவர் ஆகியோருக்கு மட்டுமே வழக்கமாக இத்தகைய வரவேற்பு அளிக்கப்படும்.
மேலும், மோடியை வரவேற்க நெதன்யாகுவும் அரசில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். அங்கு மோடிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அப்போது நெதன்யாகு, மோடியிடம் கூறுகையில், 'நமது முதல் சந்திப்பின்போது, இந்திய- இஸ்ரேல் உறவுகளில் வானமே எல்லை என்று நீங்கள் கூறியிருந்ததை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ஆனால், தற்போது அந்த உறவுகளுக்கு வானம் கூட எல்லை இல்லை என்பதைக் கூற விரும்புகிறேன். ஏனெனில், நாம் இப்போது விண்வெளித் துறையிலும் ஒத்துழைத்துச் செயல்படுகிறோம். இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பைப் பொருத்தவரை நாம் மேலும் சிறப்பாகச் செயல்பட முடியும்' என்று தெரிவித்தார்.
மலர்ப் பண்ணையைப் பார்வையிட்ட மோடி: விமான நிலைய வரவேற்புக்குப் பின்னர், மொஷாதவ் மிஷ்மார் ஹஷீவா நகரில் உள்ள பிரபலமான டான்சிகர் டான் என்ற மலர்ப் பண்ணைக்கு நெதன்யாகுவுடன் மோடி சென்று, பார்வையிட்டார். தாவர வளர்ப்பு தொடர்பான நவீன தொழில்நுட்பங்களை நேரில் அறிவதற்காக பிரதமர் அங்கு நேரில் சென்றார்.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் வருகையை கௌரவிக்கும் வகையில், கிரைசாந்திமம் என்ற மலருக்கு மோடியின் பெயரைச் சூட்டியிருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யூதர் நினைவிடத்தில்
அஞ்சலி: மலர்ப் பண்ணையைப் பார்வையிட்ட பின், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜிப் படையினரால் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள யாத் வஷேம் நினைவிடத்துக்குச் சென்ற மோடி, அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
'பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்'
யாத் வஷேம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல தலைமுறைகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட, விவரிக்கவே இயலாத தீமையை யாத் வஷேம் நினைவிடம் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதைக் காக்க வேண்டும் என்பதை அது நமக்கு கூறுகிறது. அதேபோல், உலகை பாதிக்கும் பயங்கரவாதம், அடிப்படைவாதம், வன்முறை ஆகியவற்றை நாம் எதிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT