இந்தியா

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலை.யுடன் இணைப்பா?: மத்திய அமைச்சர் விளக்கம்

DIN

தமிழகத்தில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படவிருக்கிறதா? என்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புதன்கிழமை விளக்கம் அளித்தார்.
மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து டி.ராஜா பேசியதாவது: மத்திய அரசு தமிழ் மொழிக்கு 2004-இல் செம்மொழி அந்தஸ்து அளித்தது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் பணிகள் ஆரம்பத்தில் மைசூரில் இயங்கி வந்த இந்திய செம்மொழிகள் மத்திய ஆய்வு நிறுவனத்திடம் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தமிழகத்திற்கு மாற்றப்பட்டு, 2007-ஆம் ஆண்டு முதல் சென்னையில் அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நடவடிக்கையை தமிழ் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது ஒரு தன்னாட்சி நிறுவனமாக தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலை என்ன? ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பிற மொழிகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பது போன்ற ஓர் அச்சம் நிலவுகிறது. இந்த விஷயத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டி.ராஜா கூறினார்.
இதற்கு, தமிழகம், கர்நாடகம், மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பினர்.
அப்போது, அவையில் இருந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 'சென்னையில் இயங்கி வரும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பாக அரசு முடிவு ஏதும் எடுக்கவில்லை. அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT