இந்தியா

நாகாலாந்து: ஜீலியாங் அமைச்சரவை விரிவாக்கம்

DIN

நாகாலாந்து மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற டி.ஆர்.ஜீலியாங் தனது அமைச்சரவையை சனிக்கிழமை விரிவாக்கம் செய்தார். அதன்படி, புதிதாக 10 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

கோஹிமாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 10 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பி.பி.ஆச்சார்யா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இவர்களில் 8 பேர் நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 2 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பதவியேற்பு நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டி.ஆர்.ஜீலியாங், மேலும் ஒரு அமைச்சர், வரும் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளார் என்றார்.
இதுதவிர, அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் நாடாளுமன்றச் செயலர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
நாகாலந்தில் டி.ஆர்.ஜீலியாங் தலைமையிலான நாகா மக்கள் முன்னணி அரசின் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து, டி.ஆர்.ஜீலியாங் பதவி விலகினார். அதன் பிறகு அவரது கட்சியைச் சேர்ந்த ஷுரோசெலி லீசிட்சு முதல்வரானார்.
இதனிடையே, கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, டி.ஆர்.ஜீலியாங் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆட்சியமைப்பதற்கு ஆளுநரிடம் உரிமை கோரினார். அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, சட்டப்பேரவையில் டி.ஆர்.ஜீலியாங் வெள்ளிக்கிழமை பெரும்பான்மையை நிரூபித்தார். அதைத் தொடர்ந்து, புதிதாக 10 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
வெடித்தது உள்கட்சி மோதல்: இதனிடையே, நாகலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணியில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது. கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக, 19 எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்கியும், 10 பேரை இடைநீக்கம் செய்தும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லீசிட்சுக்கு ஆதரவு அளிக்காததால், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்த பரிந்துரையின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் டி.ஆர்.ஜீலியாங் கூறுகையில், "எம்எல்ஏக்களை லீசிட்சு கட்சியில் இருந்து நீக்கினாலும், அவர்களை சட்டப்பேரவைக்குள் எதுவும் செய்ய முடியாது; நாகா மக்கள் முன்னணியின் ஆட்சி தொடரும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT