இந்தியா

மனநிறைவோடு விடை பெறுகிறேன்: பிரிவுபசார விழாவில் பிரணாப் உருக்கம்

DIN

""நாட்டு மக்களுக்கு ஒரு சாதாரண சேவகனாகப் பணியாற்றிய மகிழ்வோடும், மனநிறைவோடும் விடைபெறுகிறேன்"" என்று குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் பிரணாப் முகர்ஜி(81) கூறினார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் திங்கள்கிழமை நிறைவடைவதையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. வண்ணமிகு விழாவில் பங்கேற்க வந்த அவரை, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில், குடியரசுத் தலைவராகப் பிரணாப் முகர்ஜி ஆற்றிய பணிகளை ஹமீது அன்சாரி பட்டியலிட்டுப் பேசினார். அவர் பேசுகையில், ""குடியரசுத் தலைவர் பதவிக்கு மதிப்பையும், மரியாதையும் கொண்டு வந்து பெருமை சேர்த்த பிரணாப் முகர்ஜி, நாட்டின் ஜனநாயகப் பண்புகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்'' என்றார்.
அதைத் தொடர்ந்து ஏற்புரையாக, பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டோம். இந்தச் சிந்தனைகளே நாட்டின் வழிகாட்டும் சிந்தனையாக மாறியது.
தெளிவான சிந்தனையும், உறுதியான செயல்பாடுகளையும் கொண்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வழிவந்தவன் நான். இக்கட்டான சூழலில் கூட எந்தக் கருத்தையும் வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்காதவர் அவர்.
அடிக்கடி அமளி வேண்டாமே: 1969}ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த அவைக்குச் சென்றபோதுதான், விவாதத்துக்கான உண்மையான மதிப்பை புரிந்து கொண்டேன். மேலும், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால், மக்களின் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஆளும் கட்சியினரை விட எதிர்க்கட்சியினரின் மனதைக் காயப்படுத்துகிறது.
எனவே, நாடாளுமன்றம் என்பது விவாதம் நடத்தவும், மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான இடமுமாக இருக்க வேண்டும். அடிக்கடி அமளியில் ஈடுபடுவதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும்.
கட்டாயச் சூழலில் மட்டுமே அவசரச் சட்டம்..: மத்தியில் ஆளும் அரசு, கட்டாயச் சூழலில் மட்டுமே அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். எனவே, அவசரச் சட்டம் வழியாக, சட்டம் இயற்றும் நடைமுறையை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்களில், அவசரச் சட்ட வழிமுறையைப் பின்பற்றக்கூடாது. குறிப்பாக, நிதி தொடர்பான விவகாரங்களில் அவசரச் சட்டம் இயற்றக் கூடாது.
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு போதிய நேரம் ஒதுக்கப்படாதது கவலையை அளிக்கிறது. போதிய அளவில் விவாதம் நடத்தப்பட்டு, ஆய்வு செய்யப்பட்ட பிறகே சட்டம் இயற்றப்பட வேண்டும்.
ஆற்றல் மிக்கவர் மோடி: நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றலோடும், தீவிரத்தோடும் செயல்படுகிறார்.
ஒவ்வொரு நடவடிக்கையிலும், அவரிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பாலும், அறிவுரையாலும் பெரிதும் பயனடைந்தவன் நான். பிரதமரின் கனிவான நட்பும், மரியாதைக்குரிய பழகுதலும் எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும்.
நாட்டு மக்களுக்கு ஒரு சாதாரண சேவகனாகப் பணியாற்றிய மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து விடைபெறுகிறேன் என்றார் பிரணாப் முகர்ஜி.
பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் சுமித்ரா மகாஜன் பரிசளித்த நூல் ஒன்றை பிரணாப் முகர்ஜி பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேநீர் விருந்தில் அவர் கலந்து கொண்டார்.
விழாவில், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவெ கெளடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT