இந்தியா

அகமது படேலின் பேராசையால் காங்கிரஸ் வலுவிழக்கும்

DIN

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் பேராசை காரணமாக காங்கிரஸ் கட்சி வலுவிழக்கும் என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி (படம்) தெரிவித்தார்.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மிகவும் சேதமடைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் விஜய் ரூபானி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்திருக்கும் அளவுகடந்த அன்பின் காரணமாக நாடு முழுவதும் அக்கட்சி வலிமை இழந்து வருகிறது. காங்கிரஸ் துணைத் தலைவராக தற்போது இருக்கும் ராகுலை அக்கட்சியின் தலைவராக்குவதை பொதுமக்கள் விரும்பவில்லை. இருப்பினும், சோனியாவின் புத்திர பாசத்தால் காங்கிரஸ் கட்சி தனது வலிமையை இழந்து வருகிறது. இதேபோல், சோனியாவின் அரசியல் செயலரான அகமது படேல் மாநிலங்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்ற பேராசையின் காரணமாக மாநில காங்கிரஸ் கட்சியை மேலும் வலுவிழக்கச் செய்து வருகிறார். பேராசையின் காரணமாகவே எம்எல்ஏக்களை அவர் பெங்களூரில் தங்க வைத்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் காங்கிரஸ் முழுமையாக வலுவிழக்கும் என்றால் அதற்கு முழுக் காரணமும் அகமது படேலாகத்தான் இருக்க முடியும் என்று விஜய் ரூபானி தெரிவித்தார்.
இதனிடையே, அகமது படேல், குஜராத் காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி உள்ளிட்டோர் பனஸ்கந்தா மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.
அதன்பிறகு செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தபோது, விஜய் ரூபானி கூறிய கருத்து குறித்து அகமது படேலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை. அவர்கள் பெங்களூரு செல்வதற்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க நிவாரண முகாம்களை ஏற்படுத்தினர். பெங்களூரில் இருந்து அவர்கள் இங்கு நடக்கும் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர். காங்கிரஸ் பிரமுகர்கள் நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்' என்று அவர் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT