இந்தியா

குஜராத்: கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.3,500 கோடி ஹெராயின் பறிமுதல்

DIN

குஜராத்தில் வர்த்தக கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.3,500 கோடி மதிப்புடைய 1,500 கிலோ ஹெராயின் போதைப் பொருளை இந்திய கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
குஜராத் கடற்பகுதியில் மர்மக் கப்பலில் ஹெராயின் கடத்தி கொண்டு வரப்படுவதாக புலனாய்வு அமைப்புகளால் இந்திய கடலோரக் காவல் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு, குஜராத் கடற்பகுதியில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்த வர்த்தகக் கப்பலை, இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான "சமுத்ரபாவக்' கப்பல் இடைமறித்து தடுத்து நிறுத்தியது. பின்னர் அந்தக் கப்பலில் கடலோரக் காவல் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் 1,500 கிலோ எடையுடைய ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் அந்தக் கப்பலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கப்பல், தற்போது கடற்பகுதியில்தான் உள்ளது.
இந்த ஹெராயின் பறிமுதல் சம்பவத்தில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து இந்தியக் கடலோரக் காவல் படை (ஐசிஜி), உளவுத் துறை (ஐ.பி.), காவல்துறை, சுங்கத்துறை, கடற்படை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மிகப்பெரிய அளவுக்கு ஹெராயின் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரி கூறினார்.
பிகாரில் ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்: இதனிடையே, பிகார் மாநிலம், வைசாகி மாவட்டத்தின் தாவூத் நகரில் இருக்கும் 2 வீடுகளில் சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர். இதில், அந்த வீடுகளில் 8 குவிண்டால், கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT