நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆண் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தம்பதிகள் மருந்து சாப்பிடுவது குறித்து மாநிலங்களவையில் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்தனர்.
மாநிலங்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்னையை எழுப்பி பாஜக எம்.பி. விஜய் பி.சகஸ்ரபுத்தே பேசியதாவது:
ஆண் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சில மருந்துகளைக் சாப்பிடுவதால் குழந்தைகள், ஆண்-பெண் தன்மை கலந்து பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
எதிர்காலத்தில் அக்குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்படுவர் அல்லது திருநங்கையரிடம் ஒப்படைக்கப்படும் நிலை ஏற்படும்.
ஆண் குழந்தை மட்டும்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்போக்கு மாற வேண்டும். ஆண் குழந்தைக்காக சாப்பிடும் மருந்துகள் கருச்சிதைவு, குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பது, குழந்தை இறந்து பிறப்பது போன்ற உடனடி விளைவுகளும், பல்வேறு பக்கவிளைவுகளும் ஏற்படும் என்றார்.
கட்சி வேறுபாடுகள் இன்றி பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இந்த விஷயத்தை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.
"இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கூறினார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. "இந்த விஷயம் குறித்து அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்' என்றார்.
8% ஆண்களுக்கு நீரிழிவு நோய் உச்சம்: இந்தியாவில் 15 முதல் 49 வயதுள்ள ஆண்களில் 8 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உச்சத்தில் இருப்பதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் கூறியதாவது:
இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்குள்பட்ட ஆண்களில் 8 சதவீதம் பேருக்கும், பெண்களில் 5.8 சதவீதம் பேருக்கும் நீரிழிவு நோய் உச்சத்தில் உள்ளது.
அதேபோல ஆண்களில் 13.6 சதவீதம் பேரும், பெண்களில் 8.8 சதவீதம் பேரும் தீவிர மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய், நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக்கு எதிராக தேசிய அளவிலான செயல்திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.