இந்தியா

2019-இல் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: நிதீஷ் குமார்

DIN

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் நிதீஷ் குமார் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் அந்த மாநிலத்தின் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவருமான நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஒட்டுமொத்த நாடு, நாட்டு மக்களின் பிரதிநிதியாக, குடியரசுத் தலைவர் கருதப்படுகிறார். ஆதலால், மத்தியில் ஆளும் கட்சியானது, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிறுத்த வேண்டிய வேட்பாளரை தேர்வு செய்யும் விஷயத்தில், எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கருத்தொற்றுமையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இதை மத்தியில் ஆளும் கட்சியின் கடமை என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால், இதுதொடர்பான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்றுதான் நான் தெரிவிக்கிறேன்.
மத்தியில் ஆளும் கட்சி, இதற்கான முயற்சியில் ஈடுபடவில்லையெனில், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்தும் கடமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.
வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை. எனது கட்சி மிகவும் சிறிய கட்சி. இக்கட்சியின் தேசியத் தலைவராக நான் ஆகிவிட்டேன் என்பதால், தேசிய அளவில் பெரிய பதவி வகிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்று கருதக்கூடாது என்றார் நிதீஷ் குமார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து 2-ஆவது முறையாக அந்தப் பதவிக்கு தேர்வு செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிதீஷ் குமார் பதிலளிக்கையில், "2-ஆவது முறையாக அந்தப் பதவிக்கு அவரை தேர்வு செய்வதை விட வேறு எது நல்லதாக இருக்கும் என்று யோசிக்கலாம். எனினும், இதை மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT