இந்தியா

மாநிலங்களில் மகளிர் விடுதிகள்: தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை

DIN

மாநிலங்களில் மகளிர் விடுதிகளை அந்தந்த மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய மகளிர் ஆணையக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.
தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மாநில மகளிர் ஆணையங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் தில்லியில் உள்ள இந்தியா ஹபிடாட் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் தலைமை வகித்துப் பேசியதாவது:
மகளிர் நலன்களைப் பாதுகாப்பதுதான் தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையத்தின் அடிப்படை நோக்கமாகும். மாநில மகளிர் ஆணையங்களுடன் தேசிய மகளிர் ஆணையத்திற்கு உள்ள ஒருங்கிணைப்பை பலப்படுத்தும் நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில், இரு தரப்பிடம் இருந்தும் பரஸ்பரம் அனுபவங்களைப் பெறும் வகையிலும் இக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் கருத்துகள் மூலம் மேலும் பல மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ரேகா சர்மா பேசுகையில், "மாநிலங்களில் மகளிர் விடுதிகள் அமைக்கப்படுவது அவசியமாகும்' என்றார்.
மகளிருக்கு எதிரான அமில வீச்சு தாக்குதல் சம்பவ விவகாரம், முறைப்படுத்தப்படாமல் மேற்கொள்ளப்படும் அமில விற்பனைக்குத் தடை விதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது ஆகியவை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் மற்றொரு உறுப்பினர் சுஷ்மா சாஹு எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் மகளிர் நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைகள், திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், மகளிர் தொழில்சார் வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் அலோக் ராவத், 18 மாநிலங்களைச் சேர்ந்த மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்கள், தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் விவரம் வருமாறு: மாநிலங்களில் மகளிர் விடுதிகள் அமைப்பதற்கான விஷயங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அந்தந்த மாநில மகளிர் ஆணையங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையத்தின் மூலம் கடந்த ஆறு மாதங்களில் மாநில மகளிர் ஆணையங்களுக்கு அனுப்பப்பட்ட புகார் மனுக்களை ஆக்கப்பூர்வமான வகையில் ஒருங்கிணைக்க வேண்டும். மேலும், அதன் பின்னூட்டங்களை தேசிய மகளிர் ஆணையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மகளிருக்கு எதிரான அமில வீச்சு போன்ற கொடூரமான குற்றங்களைத் தடுக்கும் வகையில் முறையற்ற அமிலங்கள் விற்பனைக்கு தடை விதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுடன் மாநில மகளிர் ஆணையங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் ஆகிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT