இந்தியா

2019 மக்களவைத் தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களில் வெற்றி: அமித் ஷா நம்பிக்கை

DIN

கடந்த 2014 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும், எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்து வெள்ளிக்கிழமையுடன் (மே 26) மூன்றாண்டுகள் நிறைவு பெற்றன. இதையொட்டி, பாஜக சார்பில் நாடு முழுவதும் மூன்றாண்டு ஆட்சிக்கால சாதனை விளக்க விழாக்கள் நடைபெற்றன.
இந்நிலையில், பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்றது முன்னெப்போதும் நாங்கள் கண்டிராத வெற்றியாகும். வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக இதை விட அதிக இடங்களில் வெற்றி பெறும்.
ஏனெனில், கடந்த தேர்தலில் சில இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்ற மேற்கு வங்கம், கேரளம், தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று நம்புகிறேன்.
பாஜக ஆட்சியமைந்த இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தன்னம்பிக்கை, பெருமிதம், இலக்கு ஆகியவை அதிகரித்துள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகளோ ஜாதியவாதம், குடும்ப ஆட்சி போன்றவற்றிலேயே ஈடுபட்டுள்ளன.
மத்தியில் முன்பு ஆட்சி புரிந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு முறைகேடு வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய மோடி ஆட்சியின் மீது அதன் அரசியல் எதிரிகளால் கூட ஒரு ஊழல் புகாரைக் கூட எழுப்ப முடியவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ஒவ்வொரு அமைச்சரும் பிரதமரைப் போல் அதிகார தோரணையுடன் நடந்து கொண்டனர்.
அதே சமயத்தில் உண்மையான பிரதமரை (மன்மோகன் சிங்) எந்த அமைச்சரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போதைய பாஜக அரசின் மிகப்பெரிய பலமானது, அது முடிவெடுக்கும் ஆற்றல் படைத்ததாகும். மேலும், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரத்தை அது மீண்டும் நிலைநாட்டியுள்ளது.
உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் சீர்திருத்தங்கள் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
அரசியல் களத்தைப் பொருத்துவரை, தேசிய அரசியலில் நாங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். அதை உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நிரூபித்தது. அத்தேர்தலில் ஜாதிய அரசியல், குடும்ப ஆட்சி ஆகியவற்றுக்கு நாங்கள் முடிவு கட்டினோம்.
அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. அப்போது எங்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியும் எங்களுக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
ஆனால், எங்கள் கட்சி வெற்றி பெறும் இடங்களை நிச்சயம் அதிகரிப்போம் என்றார் அமித் ஷா.


ரஜினியின் அரசியல் பிரவேசம்: அமித் ஷா கருத்து

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து அமித் ஷா கூறியதாவது:
எந்தவொரு நேர்மையான மனிதரும் அரசியலில் இணைவதை வரவேற்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அரசியல் அல்ல. அரசியலில் குதிப்பதா இல்லையா என்பதை ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அமித் ஷா.
கர்நாடக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா: அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற உள்ள சில மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் தொ டர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அமித் ஷா கூறியதாவது: குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் தற்போதைய முதல்வர் விஜய் ரூபானியே பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார். மாநிலத்தில் மொத்த முள்ள 182 இடங்களில் எங்கள் கட்சி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
எனினும், ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பதை கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் சட்டப் பேரவைத் தேர்தலை பாஜக சந்திக்கும். கட்சியின் முதல்வர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்படுவார் என்றார் அவர்.
கர்நாடகத்தில் எடியூரப்பாவின் தலைமைக்கு எதிராக முன்னாள் துணைத் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தலைமையிலான கோஷ்டி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அங்கு பாஜக உள்கட்சிப் பூசலை எதிர்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT