முகப்பு
இந்தியா

இந்தியாவில் 11 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய பாக். சகோதரிகள்

போதை மருந்து கடத்தியதாக 11 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்துவந்த பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் 2 பேர் வியாழக்கிழமை தாய்நாடு திரும்பினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

போதை மருந்து கடத்தியதாக 11 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்துவந்த பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் 2 பேர் வியாழக்கிழமை தாய்நாடு திரும்பினர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷிதா பிபி என்பவர் தனது 2 மகள்களான மும்தாஜ், ஃபாத்திமா ஆகியோருடன் உறவினர்களைச் சந்திக்க உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகருக்கு செல்வதற்காக பஞ்சாப் மாநிலம், அட்டாரி ரயில் நிலையத்துக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி வந்தார். அப்போது, போதைப் பொருள்களை வைத்திருந்ததாக அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் அமிருதசரஸ் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்தபோது கடந்த 2008-ஆம் ஆண்டு ரஷிதா காலமானார். இந்தியா வரும்போதே கர்ப்பிணியாக இருந்த ஃபாத்திமாவுக்கு சிறையில் பெண் குழந்தை பிறந்தது. பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஃபயூஸியா மன்சூர், அமிருதசரஸ் சிறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்று ஃபாத்திமா மகள் ஹீமாவுக்கு பாகிஸ்தான் குடியுரிமையை வழங்கினார். சகோதரிகள் இருவரின் தண்டனைக் காலம் 2015-ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. இருப்பினும், அவர்கள் அபராதத் தொகை கட்டாத காரணத்தால் முகாம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் சகோதரிகளை விடுவிக்குமாறு அவர்களது வழக்குரைஞர் நவ்ஜோத் கௌர் சப்பா கோரிக்கை விடுத்தார். இதனிடையே, பஞ்சாபைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று அவர்களுடைய அபராதத் தொகையை செலுத்த முன்வந்தது. 
இந்தச் சூழலில், சகோதரிகள் இருவரும், சிறுமி ஹீமாவும் அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
முன்னதாக, "எங்கள் விவகாரத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி' என்று செய்தியாளர்களிடம் ஃபாத்திமா உருக்கமாகத் தெரிவித்தார்.
தங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மும்தாஜ் குற்றம்சாட்டினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →