ஜகன்மோகனின் நடைப்பயணத்துக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கோரிக்கை
ஆந்திரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஜகன்மோகன் ரெட்டி அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் 7 மாத நடைப்பயணத்தின்போது, அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பை வழங்க வேண்டும்
ஆந்திரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஜகன்மோகன் ரெட்டி அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் 7 மாத நடைப்பயணத்தின்போது, அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அவரது தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாநில காவல்துறைத் தலைவருக்கு ஜகன்மோகன் ரெட்டியின் தனிச் செயலர் பி. கிருஷ்ண மோகன் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆந்திரமெங்கிலும் பொதுமக்களைச் சந்திப்பதற்காக ஜகன்மோகன் ரெட்டி மேற்கொள்ளவிருக்கும் நடைப்பயணம், கடப்பா மாவட்டத்தில் தொடங்கி, 13 மாவட்டங்களைக் கடந்து, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில்
நிறைவடையும்.
அந்த நடைபயணம், 3,000 கி.மீ. தூரத்தை 7 மாதங்களில் கடக்கும். தினமும் 15 முதல் 16 கி.மீ.க்கு ஒருமுறை இரவில் ஓரிடத்தில் இளைப்பாறி, நடைபயணம் மறுநாள் மீண்டும் தொடங்கும். கட்சியின் தலைவர் ஜகன்மோகன் ரெட்டியுடன் கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சி-க்கள் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்பார்கள்.
நடைப்பயணத்தின்போது, இஸட் பிரிவுப் பாதுகாப்புக்குத் தகுதியுடைய ஜகன்மோகன் ரெட்டிக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். அவரது நடைபயண நிகழ்ச்சி நிரல் குறித்து மாவட்ட காவல்துறையினரிடம் கட்சியின் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அளிப்பார்கள் என்று தனது கடிதத்தில் பி. கிருஷ்ண மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, நடைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்று மாநில துணை முதல்வரும், காவல்துறைத் தலைவரும் வலியுறுத்தினர்.
எனினும், தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2012-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மேற்கொண்ட இதேபோன்ற நடைப்பயணத்துக்கு, அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை என்பதை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.