இந்தியா

நேரு பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

DIN

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128-ஆவது பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினமானது குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தில்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், நேருவின் பிறந்த தினத்தையொட்டி அவரை நினைவகூரும் வகையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது சுட்டுரைப் பதிவில், 'நமது முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128-ஆவது பிறந்த தினத்தில் அவருக்கு எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன்' என்று தெரிவித்துள்ளார். அதேபோல், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது சுட்டுரைப் பதிவில், 'இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பின்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தமது சுட்டுரைப் பதிவில், 'பண்டித ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினத்தில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்' எனக் கூறியுள்ளார்.
ராகுல் விமர்சனம்: இதனிடையே, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேருவின் கூற்றினை முன்வைத்து பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுதொர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:
மிகவும் அறிவுபூர்வமான மனிதாபிமானம் நிறைந்த ஒரு மனிதரை இன்று நினைவுகூர்கிறோம். அவர் தமது பேச்சுகளின்போது அடிக்கடி ஒரு கூற்றினைக் குறிப்பிடுவார். 'மூடத்தனமான செயலைக் காட்டிலும் அச்சுறுத்தலான விஷயம் ஒன்றும் கிடையாது' என்பதே அந்தக் கூற்று. அதனை இன்றைக்கும் அவர் நமக்கு நினைவூட்டுகிறார் என அந்தப் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகிய பாஜக அரசின் நடவடிக்கைகளை அறிவுபூர்வமற்ற செயல் என்று காங்கிரஸ் விமர்சித்து வரும் நிலையில், மேற்குறிப்பிட்ட நேருவின் கூற்றை அவர் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நினைவிடத்தில் மரியாதை: இந்நிலையில், நேருவின் பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, அனந்த் குமார் ஆகியோரும் நேரு நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி 
செலுத்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT