இந்தியா

ஜிஎஸ்டி குறைப்பு: உணவகங்களில் சாப்பிடுவதற்கான செலவு இன்று முதல் குறையும்

DIN


ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்டுகளில் சாப்பிடுபவர்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரி 12% மற்றும் 18%ல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, ஹோட்டல்களில் சாப்பிடுவோருக்கு இதுவரை 12% அல்லது 18% ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்டது. இது முழுமையாக தற்போது 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இன்று இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

குளிர்சாதன வசதி கொண்ட அல்லது குளிர்சாதன வசதி இல்லாத என இரண்டு விதமான உணவகங்களுக்குமே பொதுவாக 5% என்ற ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, ஐடிசி எனப்படும் முழு உள்ளிளீட்டு வரி வரவு (Input tax credit ) பயனை உணவகங்களுக்கும் அளிப்பதன் மூலம், அது நுகர்வோருக்கு சென்று சேரும்.

எனவே, குளிர்சாதன வசதி இல்லாத உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட 12 % ஜிஎஸ்டியும், குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்களுக்கான 18% ஜிஎஸ்டியும் முழுமையாக நீக்கப்பட்டு, 5% ஆக நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.

இதனால், இன்று முதல் ஹோட்டல்கள், உணவகங்களில் சைவம், அசைவ உணவுகளின் விலை மீது விதிக்கப்பட்ட வரி விகிதம் குறையவுள்ளது. 

மேலும், அசைவ உணவான சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விலையில் வரி விகிதக் குறைவினால், விலையில் ரூ.18 முதல் ரூ.20 வரை குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சைவ உணவான இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றின் வரிவிகிதம் குறைவதால், விலையில்  ரூ.3 முதல் ரூ. 6 வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்புக்கு பொதுமக்கள், வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 18 சதவீத வரி 5 சதவீதமாகக் குறைப்பு: நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் வகையில், ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது.

இதில், நட்சத்திர ஹோட்டல்களின் உணவுக்கு 28 சதவீதமும், குளிர்சாதன வசதி கொண்ட ஹோட்டல் உணவுகளுக்கு 18 சதவீதமும், குளிர்சாதனம் இல்லாத ஹோட்டல் உணவுகளுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.

இந்த வரிவிதிப்பு ஹோட்டல்களுக்கு அன்றாடம் சென்று உணவருந்தும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பாக அமைந்தது. சிற்றுண்டி, சாப்பாடு விலையுடன் ஜி.எஸ்.டி. வரி சேர்ந்ததால், நடுத்தர மக்கள் ஹோட்டல், உணவகங்களுக்கு குடும்பத்துடன் சென்று சாப்பிடுவதைத் தவிர்க்கத் தொடங்கினர்.

வாரத்தில் 2 முறை சென்றவர்கள் மாதத்தில் ஒருமுறை செல்லும் அளவுக்கு மாற்றத்தைக் காண முடிந்தது. இதனால், ஹோட்டல் வியாபாரம் குறைந்தது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஹோட்டல்களுக்கான வரி விகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு கிடைத்த வெற்றி: இதுகுறித்து சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் கூறியது: இந்த வரி குறைப்பு பொதுமக்களுக்கு கிடைத்த வெற்றி. உணவு என்பது அத்தியாவசியமானது. அதில், அதிக வரி விதிப்பு என்பது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது உண்மைதான்.

இப்போது வரிவிகிதம் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி உள்ள உணவகத்தில் ரூ.100-ஆக இருந்த சாப்பாடு ஜி.எஸ்.டி. உடன் சேர்த்து ரூ.118 ஆக இருக்கிறது. இது, புதிய வரி அமலுக்கு வருவதால் ரூ.105 ஆக குறையும்.

அதேபோல், குளிர்சாதன வசதியில்லாத ஹோட்டலில் சாப்பாடு ஜி.எஸ்.டி. உடன் சேர்த்து ரூ.112 ஆக உள்ளது. இதன் விலை புதிய வரி அமலுக்கு வருவதால் ரூ.105 ஆக இருக்கும் என்றார் ஆர். ராஜ்குமார்.

வரி மாற்றம் பற்றிய தகவல் இடம் பெற வேண்டும்
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் சரோஜா கூறியது: 5 சதவீதமாக வரி குறைப்பு ஏற்கக்கூடியதே. உணவகங்களில் தரமான உணவு வழங்குவது தொடர வேண்டும். புதிய வரிவிகிதம் அமலுக்கு வந்தபிறகு, ஹோட்டல்கள், உணவகங்களுக்கு வரும் மக்களுக்கு புதிய வரி விகிதம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். ஹோட்டலுக்கு வெளியே ஜி.எஸ்.டி. மாற்றம் குறித்து தகவல் இடம் பெற வேண்டும் என்றார் அவர்.

பிரியாணி விலை குறையும்
எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பிரபலமான அசைவ ஹோட்டலில் சிக்கன் பிரியாணி பார்சல் ரூ.180 ஆக இருந்தது. ஜி.எஸ்.டி.க்கு பிறகு வரியுடன் ரூ.207-ஆக இருக்கிறது. தற்போது குறைக்கப்பட்ட புதிய வரி அமலுக்கு வந்த பிறகு, வரியுடன் சேர்த்து ரூ.189-ஆக இருக்கும் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மட்டன் பிரியாணி பார்சல் முன்பு ரூ.185-ஆக இருந்த நிலையில், ஜி.எஸ்.டி. வந்தபிறகு. ரூ.212-ஆக உயர்ந்தது. தற்போது வரி குறைக்கப்பட்டுள்ளதால், புதிய வரி அமலுக்கு வரும்போது, ரூ.195-ஆக இருக்கும் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல, இரண்டு எண்ணிக்கை கொண்ட இட்லி ஜி.எஸ்.டி.யுடன் ரூ.46-ஆக இருந்தது. வரி குறைப்பு அமலுக்கு வந்த பிறகு, ரூ. 40-ஆக குறையும். இரண்டு தோசை ஜி.எஸ்.டி உடன் சேர்த்து ரூ.69-ஆக இருந்தது. புதிய வரி அமலுக்கு வந்த பிறகு, ரூ.63 ஆக குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT