இந்தியா

இணையவெளி பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாடுகளிடையே தகவல் பரிமாற்றம்

DIN

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதச் சிந்தனையைப் பரப்புவதற்கான விளையாட்டுக் களமாக இணையவெளி மாறுவதை எதிர்கொள்ள உலக நாடுகளிடையே தகவல் பரிமாற்றமும் ஒருங்கிணைப்பும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இணையவெளி தொடர்பான உலகளாவிய கருத்தரங்கம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று மோடி பேசியதாவது:
இணையம் என்பது அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது. எனினும் யாரும் இணையத்தை சுலபமாக அணுக முடியும் என்ற நிலையானது இணையதள ஊடுருவல் போன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. 
இணைய தளங்கள் முடக்கப்படுவது தொடர்பான செய்திகள் யாவும் மிகப்பெரிய பனிப்பாறையின் ஒரு சிறிய பகுதிதான். 
ஜனநாயக உலகில் இணையதள ஊடுருவல்கள் அச்சுறுத்தலாக இருப்பதை அவை உணர்த்துகின்றன. 
இணையவெளிக் குற்றவாளிகளின் சதித் திட்டங்களுக்கு சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இரையாகாமல் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். 
இணையவெளிப் பாதுகாப்பு தொடர்பான உஷார்நிலை என்பது வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
இணையம் சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள காவல்துறையினரும் இதர அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும், திறன் வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டியுள்ளது. 
இணையவெளிப் பாதுகாப்பு என்பது இளைஞர்களை கவர்ந்திழுக்கக் கூடிய வேலைவாய்ப்பு தரும் துறையாக மாறுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
பயங்கரவாத சக்திகளின் விளையாட்டுக் களமாக இணையவெளி மாறாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சர்வதேச நாடுகளிடமே உள்ளது. 
இதற்கு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே தகவல் பரிமாற்றமும் ஒருங்கிணைப்பும் அவசியம். ஒருபுறம் தனியுரிமை மற்றும் பொதுவெளியில் தகவல்கள் கிடைப்பது ஆகியவற்றுக்கு இடையிலும் மறுபுறம் தேசியப் பாதுகாப்பு விஷயத்திலும் ஒரு சமநிலையை நம்மால் பராமரிக்க முடியும்.
உருவாகி வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் வெளிப்படைத்தன்மை, தனியுரிமை, நம்பிக்கை, பாதுகாப்பு ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது.
ஆதார் திட்டத்தால் ரூ.64,000 கோடி சேமிப்பு: மானியங்களை உரிய வகையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக வங்கிக் கணக்குகள் மற்றும் செல்லிடப்பேசி எண்களை ஆதாருடன் இணைக்கும் நடைமுறையை எனது அரசு பயன்படுத்தியது. இதனால் ஏறத்தாழ ரூ.64 ஆயிரம் கோடி அளவிலான தொகை சேமிக்கப்பட்டுள்ளது என்றார் மோடி.
உலக அளவில் இந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் 3 லட்சம் கணினிகளில் இணையவெளி ஊடுருவல் தாக்குல்கள் நடைபெற்றன. இதனால் வங்கிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் துறைமுகச் செயல்பாடுகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT