இந்தியா

மல்லையாவை இந்தியா கொண்டு வரும் வழக்கு: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

DIN

பிரிட்டனில் தங்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை (61) இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான வழக்கில் மல்லையா தரப்பு தாக்கல் செய்துள்ள ஆதாரங்களுக்கு நவம்பர் 3-ஆம் தேதிக்குள் இந்திய தரப்பு பதிலளிக்க இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது.
பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன.
பிரிட்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று மத்திய அரசு அந்நாட்டுக்கு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸிடம் மல்லையா சரணடைந்தார். தொடர்ந்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை சட்டப்படி இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டது. இந்த வழக்கில் இந்தியா சார்பில் பிரிட்டன் அரசுத் தரப்பு வாதாடி வருகிறது. இந்தியா சார்பில் அவர்களிடம் மல்லையாவுக்கு எதிரான ஆவணங்களும், ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது:
இந்தியாவில் மல்லையாவின் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பான ஆவணங்களை கடந்த பிப்ரவரி மாதமே லண்டன் அரசுத் தரப்பிடம் இந்தியா அளித்துவிட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட மல்லையா, நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்றார். அவரை இந்தியா கொண்டுவருவது தொடர்பான வழக்கு ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வரும் டிசம்பர் மாதம் முடிவு கிடைக்கும். அதுவரை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை மல்லையா பெற்றுள்ளார். 
இந்திய தரப்பு தொடர்ந்துள்ள வழக்கை எதிர்த்து மல்லையா தரப்பில் சில ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பதிலளிக்க நவம்பர் 3-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இந்தியத் தரப்பு, பிரிட்டன் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களிடம் ஆதாரங்களை அளிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT