இந்தியா

கேரளத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது: சீதாராம் யெச்சூரி

DIN

வன்முறை மூலம் கேரளத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக பாஜக வன்முறையில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, தில்லியில் சீதாராம் யெச்சூரி தலைமையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி, பாஜக அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான வன்முறையை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. வன்முறையைக் கையிலெடுப்பதன் மூலமாக, அம்மாநிலத்தில் தமது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்த பாஜக முயன்று வருகிறது. ஆனால், அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறப் போவதில்லை.
பாஜகவினருக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். வன்முறை மூலமாக கேரளத்தில் ஒரு தொகுதியில் கூட உங்களால் வெற்றி பெற முடியாது. இந்தியாவிலிருந்து சிகப்புக் கொடியை (இடதுசாரிகளின் சின்னம்) அகற்றிவிடலாம் என்று பாஜக பகல் கனவு காண்கிறது. ஃபாஸிச சக்தியையே உலகிலிருந்து விரட்டிய வரலாறு எங்களுக்கு உண்டு என்பதை பாஜகவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அவர்களின் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு இல்லாதததால் அது தோல்வியில் முடிந்தது. மேலும், தமது மகனை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக அமித் ஷா அவசர அவசரமாக தில்லிக்கு திரும்ப வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வன்முறை நிகழ்த்துவதை பாஜக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுக்க எங்களின் தொண்டர்களுக்கும் தெரியும் என்றார் சீதாராம் யெச்சூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT