இந்தியா

டார்ஜீலிங்கிலிருந்து துணை ராணுவப் படைகள் வாபஸ்: மத்திய அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை

DIN

கோர்க்கா போராட்டம் வலுத்து வரும் டார்ஜீலிங் பகுதியில் இருந்து துணை ராணுவப் படைகளை வாபஸ் பெறுவதற்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து வரும் 27-ஆம் தேதி வரை படைக் குழுக்களை வாபஸ் பெற இயலாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
டார்ஜீலிங் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களை உள்ளடக்கிய கோர்க்கா பிராந்தியத்தை தனிமாநிலமாக உருவாக்குமாறு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினர் தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் வன்முறையை அரங்கேற்றுவதும் தொடர்கதையாக உள்ளது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து ஓரளவு அங்கு பதற்றம் தணிந்தது.
அதன் காரணமாக அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரில் பெரும்பாலானோரை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொண்டது. இதற்கு மாநில அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது.
டார்ஜீலிங் பகுதியில் முழுமையாக அமைதி திரும்பவில்லை என்றும், டிசம்பர் இறுதி வரை துணை ராணுவத்தை திருப்பி அழைக்கக் கூடாது என்றும் மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அதனை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதற்கு நடுவே, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜிஜேஎம் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் அங்கு மேலும் பதற்றத்தை உருவாக்கியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனுவொன்றை அளித்தது.
அதன் மீதான விசாரணை விடுமுறைக்கால அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை வந்தது. நீதிபதிகள் ஹரீஷ் டாண்டன், தேபங்ஷூ பாசக் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு பிறப்பித்த உத்தரவு:
டார்ஜீலிங் பகுதியில் துணை ராணுவப் படையினரை வாபஸ் பெறுவதற்கு வரும் 27-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. அதேவேளையில் இந்த விவகாரத்தை பண்டிகை விடுமுறைக்குப் பிறகு கொல்கத்தா உயர் நீதிமன்ற அமர்விடம் முறையிடுமாறு மேற்கு வங்க அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று விடுமுறைக் கால அமர்வு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT