இந்தியா

ஆதர்ஷ் ஊழல்: அரசியல் உள்நோக்கத்துடனேயே சிபிஐ விசாரணைக்கு ஆளுநரால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது- அசோக் சவாண் குற்றச்சாட்டு

DIN

ஆதர்ஷ் ஊழல் விவகாரம் குறித்து அரசியல் உள்நோக்கத்துடனேயே, தம்மிடம் விசாரணை நடத்த சிபிஐ அமைப்புக்கு ஆளுநரால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவாண் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்ற விவகாரம் குறித்து, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாணிடம் விசாரணை நடத்த ஆளுநர் வித்யாசாகர் அனுமதியளித்துள்ளார். இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் அசோக் சவாண் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.வி. மோர், சாதனா ஜாதவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக் சவாண் சார்பில் அவரது வழக்குரைஞர் அமித் தேசாய் ஆஜராகி வாதாடியதாவது: ஆத்ர்ஷ் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் அசோக் சவாணிடம் கடந்த 2013-ஆம் ஆண்டில் விசாரணை நடத்த அப்போதைய ஆளுநர் சங்கரநாராயணனிடம் சிபிஐ அனுமதி கோரியது. ஆனால், இந்த கோரிக்கையை சங்கரநாராயணன் நிராகரித்து விட்டார். 
அப்போது சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்கரநாராயணன் அந்த முடிவை எடுத்தார். ஒருவேளை சங்கரநாராயணனின் முடிவு தவறு என்று சிபிஐ கருதியிருந்தால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். 
ஆனால் சிபிஐ அமைப்பு வழக்குத் தொடுக்கவில்லை. அதற்கு மாறாக, சங்கரநாராயணனின் முடிவை ஏற்றுக் கொண்டு, வழக்கு விசாரணையில் இருந்து அசோக் சவாணின் பெயரை நீக்க அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், சிபிஐ கோரிக்கையை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மாநில அரசுக்கு பாஜக மூத்த தலைவர் கீர்த்தி சோமைய்யா, ஆளுநரின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் பாஜக அரசு அமைந்தது. அப்போது மாநில பாஜக அரசின் தூண்டுதலின்பேரில், ஆளுநரின் 2013-ஆம் ஆண்டு உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, சிபிஐ கோரிக்கை விடுத்தது. சிபிஐ அமைப்பு சுதந்திரமாக அந்த முடிவை எடுக்கவில்லை. இதில் அரசியல் தலையீடு உள்ளது.
சிபிஐ கோரிக்கையை ஆளுநர் வித்யாசாகர் ஏற்றுக் கொண்டு, அசோக் சவாணிடம் விசாரணை நடத்த அனுமதியளித்து கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார். அதாவது, அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
ஆதாரத்தின் அடிப்படையில் அந்த அனுமதியை ஆளுநர் அளிக்கவில்லை. அந்த அனுமதியானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது; அரசியல் சார்புடையது என்று அசோக் சவாண் வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதற்கு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் பதிலளித்து வாதிடுகையில், 'மனுவில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவின் பெயர் நீக்கப்பட வேண்டும்' என்றார். இதை அசோக் சவாணின் வழக்குரைஞர் தேசாய் ஏற்றுக் கொண்டு, திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
இந்த வழக்கு மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையும் (செப்.19) விசாரணை நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT