இந்தியா

கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள்:  உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

DIN

கார்த்தி சிதம்பரம், தனது வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாகவே அவரை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இதுதொடர்பான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது: கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் பல்வேறு வங்கிக் கணக்குகளை வைத்திருந்தது தெரியவந்தது. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு அந்தக் கணக்குகளை முடித்துக் கொள்ள அவர் முயன்றார். அதைத் தடுக்கவே கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கண்காணிப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவரது வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க விரும்புகிறோம் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதிட்டதாவது: கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொண்டபோது வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் தொடர்பாக ஒரு கேள்வியையாவது சிபிஐ அதிகாரிகள் எழுப்பியிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. அப்படி இருக்கும்போது, அந்தத் தகவல்களை மூடிய உறைக்குள் வைத்து சமர்ப்பிப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றார் அவர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT