இந்தியா

உலகில் முதல் முறை: இளைஞரின் கைகளை பெண்ணுக்கு பொருத்தி கேரள மருத்துவர்கள் சாதனை

ENS


கொச்சி : ஆசியாவிலேயே முதல் முறையாக இளம் பெண் ஒருவருக்கு இரண்டு மாற்றுக் கைகளைப் பொருத்தி கேரளாவில் உள்ள அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மைய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

விபத்தில் 2 கைகளையும் இழந்த இளம் பெண்ணுக்கு, சம வயதுடைய இளைஞரின் கைகள் பொருத்தப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல் முறையாகும்.

ஷ்ரேயா சித்தனகௌடா  (19) என்ற மணிப்பால் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி, கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் இரண்டு கைகளையும் இழந்தார்.

இந்த நிலையில், எர்ணாக்குளம் ராஜகிரி கல்லூரியில் பிகாம் இறுதியாண்டு படித்து வந்த மாணவர் சச்சின் (20), சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்த நிலையில், அவரது கைகளும் தானமாகப் பெறப்பட்டு ஷ்ரேயாவுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஃபகிர்கௌடா சித்தனகௌடரின் ஒரே மகளான ஷ்ரேயா, கடந்த ஆண்டு பள்ளியில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்த போது, பேருந்து விபத்தில் சிக்கியதில் இரண்டு கைகளும் சேதமடைந்தன. அவரது உயிரைக் காப்பாற்ற, மருத்துவமனையில் அவரது முழங்கை வரை இரண்டு கைகளும் அகற்றப்பட்டன. 

இந்த நிலையில், சச்சினின் இரண்டு கைகளும் ஷ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டு, சுமார் 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவர்களும் ஒன்றிணைந்து 13 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வரும் ஷ்ரேயா தற்போது விரல்களை அசைப்பதாகவும், இன்னும் ஒரு சில வாரங்களில் மூட்டுகளையும் அசைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விபத்தில் சிக்கி கைகளை இழந்த பிறகு மிகவும் மனம் தளர்ந்திருந்தேன். ஆனால், மாற்றுக் கைகள் பொருத்தும் வசதி இந்தியாவில் இருக்கிறது என்று தெரிந்த பிறகு, என் நிலை தாற்காலிகமானதுதான் என்று உணர்ந்தேன். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் என் இயல்பான வாழ்க்கையைத் தொடங்குவேன் என்று நம்புகிறேன் என்கிறார் ஷ்ரேயா.

இது குறித்து மருத்துவர் மோஹித் கூறுகையில், உலகிலேயே முதல் முறையாக ஒரு ஆணின் கைகள் பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஷ்ரேயாவின் அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்பட்ட பிறகு, இளைஞரின் கைகளைப் பொருத்திக் கொள்ள அவர் முழு சம்மதம் தெரிவித்தார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT