சீரடைகிறது பணத் தட்டுப்பாடு: 80% ஏடிஎம் மையங்கள் இயங்கின
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் மையங்களில் நிலவிய பணத் தட்டுப்பாடு வேகமாக சீரடைந்து வருவதாகவும், நாடு முழுவதும் புதன்கிழமை 80 சதவீத ஏடிஎம் மையங்கள்
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் மையங்களில் நிலவிய பணத் தட்டுப்பாடு வேகமாக சீரடைந்து வருவதாகவும், நாடு முழுவதும் புதன்கிழமை 80 சதவீத ஏடிஎம் மையங்கள் இயங்கியதாகவும் மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் தலைநகர் தில்லியிலும் ஏடிஎம் மையங்களில் கடந்த சில நாள்களாக மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் இல்லை. இதனால், பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்களை தேடி அலையும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கத்தில், 'கடந்த 3 மாதங்களாகவே வழக்கத்தைவிட அதிக அளவில் பொதுமக்கள் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். அரசிடம் போதுமான அளவுக்கு கரன்சி நோட்டுகள் கையிருப்பு உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை தற்காலிகமானதுதான்' என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், ரூ.2,000 நோட்டுகளின் கையிருப்பு போதிய அளவில் இல்லாதது, ரூ.200 நோட்டுகளை விநியோக்கும் வகையில் ஏடிஎம்களில் வசதி இல்லாதது உள்ளிட்டவையும் பணத் தட்டுப்பாட்டுக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்நிலையில், பொதுத் துறை வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சக மூத்த அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், நிதியமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, இதர வங்கிகள், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் நிலைமை சீரடைந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள 2.2 லட்சம் ஏடிஎம் மையங்களில் 80 சதவீத மையங்கள் புதன்கிழமை இயங்கின. கடந்த 16-ஆம் தேதி நாடு முழுவதும் 60 சதவீத ஏடிஎம்களே இயங்கின. இந்த வார இறுதிக்குள் நிலைமை முழுமையாக சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில மாநிலங்களில் நீடிப்பு: எனினும், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு புதன்கிழமையும் நீடித்தது. தில்லியிலும் சில ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை.
எஸ்பிஐ தகவல்: இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு சீரடைந்துவருவதாகவும், 92 சதவீத ஏடிஎம்கள் இயங்குவதாகவும் அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: போதிய அளவு கரன்சி நோட்டுகளை அச்சடித்து, விநியோகித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. அப்படியென்றால் பணத்தட்டுப்பாடு எப்படி வரும்? தற்போது அறுவடைப் பருவம் என்பதால் அதற்குரிய பணத் தேவையை ரிசர்வ் வங்கி தவறாக கணக்கிட்டுள்ளதாக சந்தேகிக்கிறேன். மத்திய அரசு ரூ.2,000 புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. பதுக்கல்காரர்களுக்கே அது பயன்பட்டுள்ளது.