முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வானொலியில் புரட்சி

'ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர்.ஸ்ரீதர்.

Updated On : 31 மே 2026, 1:07 pm IST
பகிர்:

'ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர்.ஸ்ரீதர்.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், வானொலி ஒலிபரப்பு, நவீன ஆடியோ பாட்காஸ்ட் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் பங்காற்றி, பல்வேறு அதிநவீன எதிர்காலத் தொழில்நுட்பங்களை முன்னோடியாக அறிமுகப்படுத்தியதற்காக ஆர். ஸ்ரீதருக்கு 'பத்மஸ்ரீ' விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

விருது பெற்றது குறித்து ஸ்ரீதர் கூறியது:

Advertisement

Advertisement

'1976-ஆம் ஆண்டில் எனது இருபத்து மூன்றாம் வயதில் சென்னை வானொலியில் அறிவியல் செய்தியாளராகப் பணிக்குச் சேர்ந்தேன். வானொலியில் பாமர மக்களை உள்ளே வர வைத்தோம். கிராமங்களை நோக்கி வானொலி நிகழ்ச்சிகள் செல்லத் தொடங்கியதும், அதன் தாக்கம் அபாரம்.

தில்லி அகில இந்திய வானொலியின் தலைமையகத்தில், தலைமை நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன், சென்னை வானொலி நிகழ்ச்சிகளை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவு போட்டது எனது நிகழ்ச்சி தயாரிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.

நிகழ்ச்சித் தயாரிப்புப் பணியில் 55 ஆண்டுகள் பணியாற்றினேன். எனது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, மத்திய அரசு, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு என்னை அழைத்துக்கொண்டது. 1987-ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்னையில் இருந்து புதுதில்லிக்குச் சென்றுவிட்டேன். அங்கு தேசிய அறிவியல் தினம், அறிவியல் விருதுகள் வழங்க வேலை செய்தோம்.

1990-ஆம் ஆண்டு ராமாயணம், மகாபாரதம் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் வந்த புதிதில், 'மானுடம் வென்றது' என்ற நிகழ்வை வாரம்தோறும் நடத்தி, 140 வாரங்கள் என வானொலியில் வெற்றிகரமாக நடத்தினோம். 18 மொழிகளில் 200 வானொலி நிலையங்களில் நாடு முழுவதும் 'மானுடம் வென்றது' ஒலிபரப்பானது.

1990-களில் தனியாரும் வானொலி நிகழ்ச்சிகளை வழங்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. அதன்பின்பு வானொலியில் பெரும் புரட்சி ஏற்பட்டது. பண்பலை (எஃப்.எம்.) வானொலி சேவைகள் தொடங்கப்பட்டன. பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே இருந்த ரேடியோ கருவிகள், சாமானியர்களும் வாங்கும் அளவுக்கு விலை குறைந்தது. இப்போது கார்களில், கையடக்க ரேடியோக்களில் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வில் வானொலி அங்கமாகிவிட்டது.

2004-ஆம் ஆண்டில் என்னுடைய கண்டுபிடிப்பான 'அண்ணா எஃப்.எம்.' என்ற சமுதாய வளாக வானொலி பெரும் பெயரை தந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் தற்போது 550 சமுதாய வானொலிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 50 சமுதாய வானொலிகள் உள்ளன. இன்றைக்கு சமுதாய வானொலி தொடங்க ரூ.15 லட்சம் செலவாகும். அதனை முழு மானியத்தில் மத்திய அரசே திரும்பத் தந்துவிடும். உள்ளூர் செய்திகள்தான் சமுதாய வானொலியின் அடிநாதம். உள்ளூர் மக்களுக்கான ஒரு பெரும் தளம்தான், அதன் பலம்.

இன்றைக்கு சமுதாய வானொலி தொடங்க அதற்கான முழு மானியத்தை மத்திய அரசே வழங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மாதந்தோறும் பேசுகிறார். அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வானொலி சேவை பாலமாக இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) யுகத்தில் வானொலி தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வானொலி, காட்சி வானொலியாக மாறவேண்டும். அதாவது பண்பலை அலைவரிசை மூலமாகவே சிறிய வடிவிலான திரையில் வானொலி ஒலிபரப்பு இருக்கும். சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

குறைந்த டேட்டாவில் பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் வானொலி சேவைகள் மாறவேண்டும். ஒலிபரப்புத் துறை பின்னணியைக் கொண்ட ஒருவருக்கு முதன்முதலாக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி'' என்கிறார் ஆர். ஸ்ரீதர்.

-ஆர்.ஜி. ஜெகதீஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.