இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை இலங்கை தமிழர்களுக்கு அளிக்கும் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக தில்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் தமிழர்களுக்கு 60ஆயிரம் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.2,418 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஏறக்குறைய 47ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 404 வீடுகள் இலங்கைத் தமிழர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, நுவாரா எலியா நகரில் நடைபெற்றது. இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியத் தூதர் தரண்ஜித் சிஹ் சாந்து, இலங்கை அமைச்சர்கள் பழனி திகம்பரம், நவீன் திசநாயகே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தில்லியில் இருந்து காணொலி காட்சி முறையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் கூறுகையில், "அண்டை நாடுகளுடனான நட்புறவில் இலங்கைக்கு சிறப்பான இடத்தை இந்தியா எப்போதும் அளிக்கும். இலங்கை தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நீங்கள் இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்த உதவுகிறீர்கள்.
இலங்கை தமிழர்களுக்காக மேலும் 10ஆயிரம் வீடுகளை கட்டித்தரவும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நிலத்தையும் இலங்கை அரசு தேர்வு செய்துள்ளது' என்றார்.
ரணில் விக்ரமசிங்க கூறுகையில், "கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி. இலங்கை தலைநகர் கொழும்புவையும், உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியையும் விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கும் மோடியின் யோசனையையும் வரவேற்கிறேன்' என்றார்.
கொழும்பு-வாராணசி இடையே கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.