முகப்பு
இந்தியா

நிவாரண நிதியுதவி போதாது: பிரதமர் மோடிக்கு கேரள முன்னாள் முதல்வர் கடிதம்

நிவாரண நிதியுதவி போதாது என பிரதமர் மோடிக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 22 ஆகஸ்ட், 2018 at 6:16 PM
பகிர்:

கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆலுவா, சாலக்குடி, செங்கன்னூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் உடனடி ரூ.500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் மழை சார்ந்த இடர்பாடுகளில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisement

கடந்த 12-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடி நிதி மற்றும் பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி நிதியுதவி ஆகியவை செவ்வாய்கிழமை விடுவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கேரளாவுக்கு 89,540 மெட்ரிக் டன் அரிசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்தது மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அறிவித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சார்பில் கேரளாவுக்கு ரூ.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1 கோடி குளோரின் மாத்திரைகள் உட்பட 65 மெட்ரிக் டன் மருந்துகள் திருவனந்தபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் பாதைகளை சீரமைப்பதில் கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என தேசிய அனல் மின்நிலையம் மற்றும் தேசிய மின்சார கட்டுமானக் கழகம் ஆகிய மத்திய அரசு நிறுவனங்களை மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

வெள்ளத்தில் குடிசைகளை இழந்த கிராமப்புற மக்களுக்கு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டித் தரப்படும். மத்திய அரசின் நிகழாண்டு பட்ஜெட்டில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி கேரள மாநிலத்துக்கு 5.5 கோடி நபர்களுக்கான வேலை நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

கூடுதல் வேலை நாள்களை ஒதுக்குமாறு கேரள அரசு கோரிக்கை விடுத்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும். மத்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கேரள விவசாயிகள் மீண்டும் பயிர் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், நிவாரண நிதியுதவி போதாது என பிரதமர் மோடிக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி செவ்வாய்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இதை கூறுவதற்கு என்னை மன்னிக்க வேண்டும். இருப்பினும், கேரளாவுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவி போதாது. கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு அறிவித்த இந்த நிதியுதவி மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதுபோல ஐக்கிய அரபு அமீரகம் நிதியுதவியாக வழங்கயிருந்த ரூ.700 கோடியையும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்பது போன்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இது கேரள மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சட்டரீதியல் ஏதாவது சிக்கல் ஏற்பட்டிருந்தால் அதை மத்திய அரசு உடனடியாக சரிசெய்து, அந்த நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.