இந்தியா

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு: முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா உள்பட மூவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

DIN

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா உள்பட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் மொய்ரா, மதுஜோர் ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களைக் கடந்த 2012-ஆம் ஆண்டு விஎம்பிஎல் என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில், ஹெச்.சி. குப்தா, நிலக்கரித் துறை அமைச்சக முன்னாள் இணைச் செயலர் கே.எஸ். கிரோபா, நிலக்கரித் துறை அமைச்சகத்தின் இயக்குநர் அந்தஸ்தில் இருந்தவரும், தற்போது சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் இணைச் செயலராகப் பதவி வகித்துவருபவருமான கே.சி. சாம்ரியா, விஎம்பிஎல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விகாஷ் பாட்னி, அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஆனந்த் மாலிக் ஆகியோரைக் குற்றவாளிகள் என அறிவித்து கடந்த மாதம் 30-ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிபதி பாரத் பராசர் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி புதன்கிழமை அறிவித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குப்தா, கிரோபா, சாம்ரியா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. விஎம்பிஎல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விகாஷ் பாட்னிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. 
அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஆனந்த் மாலிக்குக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், விஎம்பிஎல் நிறுவனத்துக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
3 பேருக்கு ஜாமீன்: இதையடுத்து, விகாஷ் பாட்னியும், மாலிக்கும் சிறையில் அடைக்கப்பட்டனர். குப்தா, கிரோபா, சாம்ரியா ஆகியோருக்கு 4 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை வழங்கப்பட்டதால், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2005 முதல் 2008 வரை நிலக்கரித் துறை செயலராக குப்தா பதவி வகித்தார். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான 2 வழக்குகளில் இவருக்கு ஏற்கெனவே சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. ஒரு வழக்கில் 2 ஆண்டுகளும், மற்றொரு வழக்கில் 3 ஆண்டுகளும் இவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நிலக்கரிச் சுரங்கம் சம்பந்தப்பட்ட 12 வழக்குகளில் இவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT