இந்தியா

நிதி மோசடியாளர்கள் வெளிநாடு சென்றாலும் தப்ப முடியாது: பிரதமர் மோடி

DIN


நிதி மோசடியாளர்கள் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாட்டுக்குச் சென்றாலும் அவர்களால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிவிட முடியாது என்பதை நிரூபித்துவிட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேட்டில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் துபையில் இருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். இதற்கு அடுத்த நாளிலேயே, விஜய் மல்லையா, வங்கிகளில் தான் மோசடி செய்த கடன் தொகையை திருப்பிச் செலுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார். தானும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சத்திலேயே அவர் இவ்வாறு கூறியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஊடக நிறுவனம் சார்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
இதற்கு முன்பு நமது நாட்டில் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த (நேரு குடும்பம்) பலர் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்களால் பெரிய அளவில் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய முடியவில்லை. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு நீங்கள் அனைவருமே சாட்சிகளாக உள்ளீர்கள். நாட்டில் வறுமை பெருமளவில் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், எதிர்க்கட்சியினர் இப்போது இல்லாத பல பிரச்னைகள் குறித்துப் பேசி அரசியல் ஆதாயம் தேட முயலுகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு அடுத்தகட்டமாக எரிவாயு இணைப்பு, வீடுகளுக்கு மின்சார இணைப்பு, வங்கிக் கணக்கு, கழிவறை வசதி போன்றவற்றை அரசு செய்து தந்துள்ளது. 
இப்போதைய அரசு மக்கள் நலன் சார்ந்த சிறந்த முடிவுகளை துணிந்து மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது. புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. அரசு நிர்வாகம் இப்போது சிறப்பாக உள்ளது. நாட்டின் வளங்கள் எவ்விதத்திலும் சுரண்டப்படாமல் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. தேசத்தின் பன்முக கலாசாரம் கட்டிக் காக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்திறன் கடந்த ஆட்சியில் இல்லை. அனைத்து விஷயங்களிலும் அரசு நிர்வாகத்தை சிறப்பாக செயல்பட வைத்துள்ளோம்.
நமது இளைஞர்கள் திறமையானவர்கள் மட்டுமல்ல கடுமையான உழைப்பாளிகளும் கூட. அவர்கள் தொழில் தொடங்குவதற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இளைஞர்களை வேலை தேடுபவர்களாக இல்லாமல் பலருக்கு வேலை தருபவர்களாக உயர்த்தி வருகிறோம்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 
இந்தியாவில் கோடிக்கணக்கில் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றால் தப்பிவிடலாம் என்ற நிலை முன் இருந்தது. ஆனால், நிதி மோசடியாளர்கள் இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தப்ப முடியாது. அவர்களை பிடித்து வந்து சட்டத்தின் முன்பு நிறுத்துவோம் என்ற நிலையை இந்த ஆட்சியில் ஏற்படுத்தியுள்ளோம். நிதிமோசடியாளர்களை தப்பவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள இந்த அரசு, இது தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தி நல்ல முடிவுகளை எட்டியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT