இந்தியா

இந்திய பொறியாளரை விடுவித்தது பாகிஸ்தான்: 6 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்

DIN


பாகிஸ்தான் சிறையில் கடந்த 6 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த இந்திய பொறியாளர் செவ்வாய்க்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்தியாவுக்கு அவர் உடனடியாக திரும்பி வந்தார்.
மும்பையின் புறநகர் பகுதியான வெர்சோவாவை சேர்ந்த ஹமீது நிஹல் அன்சாரி, இணையதளம் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதையடுத்து அப்பெண்ணை சந்திப்பதற்கு ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் அவர் சென்றார். அப்போது அவரை பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த அடையாள அட்டையை போலியாக தயாரித்து வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி அந்நாட்டு அதிகாரிகள் கடந்த 2012ஆம் ஆண்டு கைது செய்தனர்.
இந்த வழக்கில், ஹமீது அன்சாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு விதித்தது. இதையடுத்து, பெஷாவர் சிறையில் அன்சாரி அடைக்கப்பட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சுமார் 6 ஆண்டுகள், பாகிஸ்தான் சிறையில் கழித்த நிலையில், அன்சாரிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை கடந்த 15ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 
இருப்பினும், சட்டரீதியிலான ஆவணங்கள் தயாராகாததால் அவர் விடுதலை செய்யப்படாமல் இருந்தார். இதுதொடர்பான வழக்கை கடந்த வியாழக்கிழமை விசாரித்த பெஷாவர் உயர்நீதிமன்றம், இந்தியாவுக்கு அன்சாரியை ஒருமாதத்துக்குள் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெடு விதித்தது.
இந்நிலையில், பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்சாரி செவ்வாய்க்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், உடனடி பயண சான்றிதழ் அளித்தது. 
இதனடிப்படையில், அட்டாரி-வாகா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்கு அவர் திரும்பினார். எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அன்சாரியை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்பின்னர் எல்லையில் காத்திருந்த தனது பெற்றோருடன் அன்சாரி இணைந்தார். அன்சாரியை அவரது பெற்றோர், கண்ணீர் மல்க ஆரத்தழுவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 
இதையடுத்து கடவுளுக்கும், தாய்நாட்டுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், நிலத்தை தொட்டு கும்பிட்டு, அவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அன்சாரியின் பெற்றோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுளிடம் நாங்கள் நடத்திய பிரார்த்தனைக்கு பதில் கிடைத்துவிட்டது. எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றனர்.
மும்பைக்கு புதன்கிழமை அன்சாரி திரும்புகிறார். அவரை வரவேற்க அப்பகுதி மக்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT