இந்தியா

ரூ.11,400 கோடி மோசடி விவகாரம்: நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை 5-ஆவது நாளாக சோதனை

DIN

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.11,400 கோடி மோசடி செய்த விவகாரத்தில், தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை 5-ஆவது நாளாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த மோசடி தொடர்பாக சிபிஐ இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ள நிலையில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. 
நீரவ் மோடி மட்டுமன்றி மோசடியில் தொடர்புடைய அவரது மனைவி ஆமி, சகோதரர் நிஷால், அவரது உறவினரும் கீதாஞ்சலி குழும நிறுவனங்களின் உரிமையாளருமான மெஹுல் சோக்ஸி ஆகியோர் ஏற்கெனவே வெளிநாடு தப்பிவிட்ட நிலையில், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 15-ஆம் தேதியில் இருந்து சோதனை மேற்கொண்டு வருகிறது.
மும்பையிலுள்ள நீரவ் மோடியின் இல்லத்திலும், புணே, ஒளரங்காபாத், கொல்கத்தா, தில்லி, லக்னௌ, பெங்களூரு, சூரத்தில் உள்ள 38 இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை 5-ஆவது நாளாக சோதனைகள் தொடர்ந்தன.
இதுவரை ரூ,5,716 கோடி மதிப்புள்ள வைரகற்கள், தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸியின் தனிப்பட்ட மற்றும் அலுவல்பூர்வமான ஆவணங்களும் சிக்கியுள்ளன. அவை ஆராயப்பட்டு வருவதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல, மேற்கண்ட இருவருக்கும் சொந்தமான 24 அசையாச் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளிலும் அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, அமலாக்கத் துறை இயக்குநர் கர்னால் சிங், மும்பைக்கு திங்கள்கிழமை வருகை தந்து, விசாரணை நிலவரத்தை கேட்டறிந்தார்.
சிபிஐ சோதனை நீடிப்பு: ரூ.11,400 மோடி மோசடியின் மையப் புள்ளியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனையை தொடங்கினர். இதையடுத்து, வங்கி வாயில் மூடப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திங்கள்கிழமை 2-ஆவது நாளாக இச்சோதனை தொடர்ந்தது.
நீரவ் மோடி நிறுவன உயரதிகாரியிடம் விசாரணை: நீரவ் மோடியின் ஃபைவ் ஸ்டார் வைர நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி விபுல் அம்பானியிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர். அந்த நிறுவனத்தின் நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் அறிந்தவர் என்ற அடிப்படையில் அவரிடம் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.
சிவிசி ஆலோசனை: இதனிடையே, இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுடனும், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளுடனும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) கே.வி.சௌதரி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய சூழலை கையாள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கே.வி.சௌதரியிடம் வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதிகாரிகள் ராஜிநாமா: வங்கி மோசடியில் சிக்கியுள்ள மெஹுல் சோக்ஸியின் கீதாஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சந்திரகாந்த் கார்கரே, செயலாளர் பங்குரி, நிர்வாக வாரிய உறுப்பினர் கிருஷ்ணன் சங்கமேஸ்வரன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT