இந்தியா

புத்தாண்டு தினக் கொண்டாட்டம்: குடிபோதையில் வாகனம் ஓட்டிய 1,745 பேர் மீது வழக்கு: கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு

தினமணி

தில்லியில் புத்தாண்டு தினத்தில்  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 1,745 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகமாகும்.

இது குறித்து தில்லி காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சிறப்பு ஆணையர் தீபேந்திர பதக் கூறியதாவது:  
புத்தாண்டு தினத்தையொட்டி மார்க்கெட் பகுதிகள் உள்பட முக்கிய இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க சிறப்புக் கவனம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, நகர் முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.   

இருப்பினும், சிலர் பெண்களை வாகனம் ஓட்டவைத்து போலீஸாரிடம் இருந்து தப்பித்துள்ளனர்.  இருந்தாலும், இந்த வகையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 10 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் புத்தாண்டு தினத்தன்று  மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வகையில் மொத்தம் 889 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

ஆனால், இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் 1,745 பேர் சிக்கியுள்ளனர்.  தெற்கு தில்லியில் 275 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கோட்லா முபாரக்புரில் நான்கு வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி வாகனத் தணிக்கையின் போது 33 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  நெல்சன் மண்டேலா மார்க்கில்தான் அதிகபட்சமாக 18 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தையொட்டி, தில்லி முழுவதும் மொத்தம் 433 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 125 இடங்களில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோரைக் கண்காணிப்பதற்கென அமைக்கப்பட்டிருந்தன.  சோதனையின் போது சிக்கியவர்களில் பலர் முதல் முறையாக மது அருந்தியுள்ளதாகக் கூறி மன்னிப்புக் கோரினர். இதனால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாமல் எச்சரித்து அனுப்பப்பட்டனர். 

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக பிடிபட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு பிறந்த ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவுக்கு முன் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக மொத்தம் 745 பேர் சிக்கினர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இந்த வகையில் 1,000 பேர் சிக்கினர். அவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுபோக, சாலை விதிகளை மீறியதாக தில்லி முழுவதும் மொத்தம் 16,420 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கிரேட்டர் கைலாஷ், சாகேத், சஃப்தர்ஜங் மார்க்கெட் ஆகிய பகுதிகளில்தான் அதிகம் பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சிக்கியுள்ளனர்.  இது தொடர்பாக 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வசந்த் விஹார், வசந்த் குஞ்ச் ஆகிய பகுதிகளில் 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்கள், சர்ச்கள், மசூதிகள் உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலகங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக வசதி படைத்தவர்கள் அதிகம் வசிக்கும் லூட்டியன்ஸ் பகுதியில் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக சிறப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  தலைக் கவசம் அணியாமலும், ஆபத்தான வகையிலும் வாகனங்களை ஓட்டியதாக நகர் முழுவதும் மொத்தம் 4,033 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நகரில் மக்கள் அதிகம் கூடும் உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.  குடிபோதையில் தகராறு ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.  மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றார் தீபேந்திர பதக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT