இந்தியா

நீதிபதி லோயா மர்ம மரணம்: மகாராஷ்டிர அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

DIN

நீதிபதி பி.எச்.லோயா மர்ம மரண வழக்கில், வரும் 15-ஆம் தேதிக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பி.எச்.லோயா, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி, தனது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு நாகபுரிக்குச் சென்றபோது, அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார். இவர், சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தவர் ஆவார்.
இந்நிலையில், நீதிபதி பி.எச்.லோயாவின் மரணம் குறித்து சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பி.ஆர்.லோன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதே கோரிக்கையுடன் மும்பை உயர் நீதிமன்றத்தில் மும்பை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஒரு மனுவைக் கடந்த 8-ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.எம்.சந்தான கெளடார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:
நீதிபதி பி.எச்.லோயாவின் மரணம், முக்கியமான விவகாரம். அதை விசாரிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில், மும்பை வழக்குரைஞர் சங்கத்தின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும். நீதிபதி பி.எச்.லோயா மரணம் தொடர்பான அறிக்கைகள், மகாராஷ்டிர அரசின் பதில் அறிக்கை ஆகியவற்றை, அரசுத் தரப்பு வழக்குரைஞர் நிஷாந்த் ஆர்.கத்னேஷ்வர்கர், வரும் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
முன்னதாக, மும்பை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, 'நீதிபதி பி.எச்.லோயா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ஏற்கெனவே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
எனவே, இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தினால், அது, மும்பை உயர் நீதிமன்றத்தின் விசாரணையைப் பாதிக்கும்' என்றார்.
பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், 'இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்பதற்காக, மும்பை வழக்குரைஞர்கள் சங்கம் ஏற்கெனவே எங்களுக்கு அறிவுறுத்தல்களை அளித்துவிட்டது' என்றார். இதனிடையே, வழக்கின் அடுத்த விசாரணை, 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மனுவை திரும்பப் பெற நெருக்கடி: முன்னதாக, நீதிபதி பி.எச்.லோயாவின் மரணத்தை விசாரிக்கக் கோரும் மனுவைத் திரும்பப் பெறுமாறு தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் தெஷீன் பூனாவாலா குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கில், தெஷீன் பூனாவாலாவும் ஒரு மனுதாரர் ஆவார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீதிபதி பி.எச்.லோயாவின் மரணத்தை விசாரிக்கக் கோரும் மனுவைத் திரும்பப் பெறுமாறு மூத்த வழக்குரைஞர் ஒருவர் என்னிடம் வலியுறுத்தினார். 
ஆனால், நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; இந்த வழக்கைச் சுற்றியுள்ள அரசியலில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று அவரிடம் கூறிவிட்டேன். எதிர்ப்புகள் இருந்தாலும், உறுதியுடன் வாதாடுமாறு எனது வழக்குரைஞரிடம் கூறியிருக்கிறேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT