இந்தியா

தில்லியில் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது: 'இந்தியாவின் பின்-லேடன்' 

DIN

குஜராத் தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்
குஜராத்தில் கடந்த 2008-இல் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவரும், இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவருமான அப்துல் சுபான் குரேஷி, தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த சில தினங்களில் குடியரசு தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தேசியத் தலைநகரில் முக்கிய பயங்கரவாதி சிக்கியுள்ளார். இதுதொடர்பாக தில்லி காவல்துறையினர் திங்கள்கிழமை கூறியதாவது:
கிழக்கு தில்லியின் காஜிப்பூர் பகுதியில் பழைய நண்பரை சந்திப்பதற்காக அப்துல் சுபான் குரேஷி (46) சனிக்கிழமை மாலை வரவிருப்பது குறித்து, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் காவல்துறை குழுக்கள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டன. அப்போது அங்கு வந்த குரேஷியை, காவல்துறையினர் பின்தொடர்ந்து சென்றனர். இதையறிந்து கொண்ட அவர், காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினரும் திருப்பிச் சுட்டு, பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்கு பின்னர், குரேஷி கைது செய்யப்பட்டார்.

2008-இல் ஆமதாபாத் நகரில் நடந்த குண்டுவெடிப்பு (கோப்புப்படம்).
2008-இல் ஆமதாபாத் நகரில் நடந்த குண்டுவெடிப்பு (கோப்புப்படம்).


14 நாள் போலீஸ் காவல்: இந்நிலையில், தில்லி பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் குரேஷி திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, தில்லி காவல்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்றுக் கொண்ட நீதிபதி தீபக் ஷெராவத், குரேஷியை 14 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பி உத்தரவிட்டார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் கடந்த 2008, ஜூலை 26-இல் 20 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக, அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அப்துல் சுபான் குரேஷியை தேசிய புலனாய்வு அமைப்பினர் தேடி வந்தனர். இந்தச் சூழலில் அவர் தில்லியில் கைதாகியுள்ளார்.
'இந்தியாவின் பின்-லேடன்' 
தொழில்துறை மின்னணுவியலில் டிப்ளமோ முடித்தவரான குரேஷி, கணினி பொறியியலிலும் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 2001-இல் தனது பயங்கரவாத பயணத்தை தொடங்கும் முன்பு வரை மும்பையில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்தார்.
ஆரம்ப காலங்களில் 'சிமி' இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட குரேஷி, பின்னர் யாசின் பத்கலுடன் இணைந்து இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை உருவாக்கினார். அதன் பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து, இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 
வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்தவரான குரேஷிக்கு, குஜராத் குண்டுவெடிப்பு மட்டுமன்றி, மும்பை, பெங்களூரு தொடர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
'இந்தியாவின் பின்-லேடன்' என்று விசாரணை அமைப்பினரால் அழைக்கப்படும் இவர், குஜராத் குண்டுவெடிப்புக்கு பின் நேபாளத்துக்கு தப்பி, அங்கு போலி அடையாளத்தில் வசித்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 
அங்கு பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த போதிலும், இந்தியாவில் மீண்டும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அதற்கான நிதியை திரட்டுவதற்காக, யாசின் பத்கலின் அறிவுறுத்தலின்பேரில், அவர் 2015-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
2017-க்கு பிறகு இந்தியாவுக்கு அவ்வப்போது வந்து, இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் வேலையிலும் அவர் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT