இந்தியா

இது ஜனநாயகத்தின் வெற்றி: தீர்ப்பை வரவேற்று அமைச்சரவையைக் கூட்டும் கேஜரிவால் 

DIN

புது தில்லி: இது ஜனநாயகத்தின் வெற்றி என்று அதிகாரப் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், உடனடியாக புதன் மாலை அமைச்சரவையைக் கூட்ட உள்ளார்.

தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையேயான அதிகாரப் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து வருகிறது.

இந்த மோதல் விவகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தில்லி யூனியன் பிரதேசம் என்பதால், துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வெளியாகியுள்ளது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியிட்ட தீர்ப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மீது துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவையுடன் இணக்கமாக துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும். மத்திய அரசு சட்டப்பேரவை விவகாரங்களில் தலையிடக் கூடாது. 

அரசியல் சாசனத்தை மதிக்கும்படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தை மதிப்பது அனைவரது கடமை. மத்திய, மாநில அரசுகளின் உறவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆளுநரோ, மாநில அரசோ எதனால் நலத்திட்டங்கள் தாமதமானாலும் இரண்டுமே பொறுப்பேற்க வேண்டும். அமைச்சரவை முடிவுகள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். 

ஆளுநர் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டியது அவசியம் இல்லை.

உச்ச நீதிமன்றம் அளித்த 9 தீர்ப்புகளின் அடிப்படையில் தில்லி அரசுக்கு மற்ற மாநிலங்களுக்கு இருப்பது போன்ற அதிகாரங்கள் கிடையாது. ஆனால், ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை. நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது.

துணைநிலை ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.  எல்லா விஷயங்களுக்கும் மாநில அரசு ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கன்வில்கர் தனது தீர்ப்பை வாசித்து வருகிறார்.

இந்நிலையில் இது ஜனநாயகத்தின் வெற்றி என்று அதிகாரப் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், உடனடியாக புதன் மாலை அமைச்சரவையைக் கூட்ட உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இது தில்லி மக்களுக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி; ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி. இன்று மாலை 4 மணிக்கு எனது இல்லத்தில் மாநில அமைச்சர்களின் கூட்டத்தை கூட்டவுள்ளேன். அக்கூட்டத்தில் இதுவரை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT